சட்டசபை கட்டுவதற்கான ஆயத்த பணிகள்

புதுவை சட்டசபை கட்டுவதற்காக ஆயத்த பணிகள் குறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Update: 2023-06-11 16:00 GMT

புதுச்சேரி

புதுவை சட்டசபை கட்டுவதற்காக ஆயத்த பணிகள் குறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சட்டசபை கட்டிடம்

புதுச்சேரியில் பழமையான சட்டசபை கட்டிடத்தை மாற்றி தலைமை செயலகத்துடன் கூடிய புதிய சட்டசபை கட்டிடம் கட்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி தீவிர முயற்சி எடுத்துள்ளார். இதற்காக தனியார் இடத்தை கையகப்படுத்தி புதிய சட்டமன்றம் கட்டுவது சாத்தியமாகாது என்பதால் தட்டாஞ்சாவடியில் அரசுக்கு சொந்தமான ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் உள்ள 5 ஏக்கர் நிலத்தில் 6 தளங்களைக் கொண்ட புதிய சட்டசபை கட்டிடத்தை கட்ட திட்ட மிடப்பட்டுள்ளது.

விரிவான திட்ட அறிக்கை

இதற்கிடையே முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் டெல்லி சென்று மத்திய மந்திரிகளை சந்தித்து புதுவை சட்டசபை கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து மத்திய அரசு நிதி ஒதுக்கீடு தொடர்பாக புதுவை அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.

அப்போது புதுவை சட்டமன்றம் கட்ட ரூ.440 கோடி ஒதுக்கவும் கொள்கை அடிப் படையில் சம்மதம் தெரிவித்தது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்து அனுப்புமாறும் கேட்டுக்கொண்டது. இதற்கான பணிகளில் கவனம் செலுத்துமாறு முதல்-அமைச்சர் ரங்கசாமியின் அறிவுறுத்தலின் பேரில் பொதுப்பணித்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

வடிவமைப்பு

இந்த நிலையில் புதிய சட்டசபை கட்டுவதற்கான வரை படம் தயாரிப்பில் டெல்லியை சேர்ந்த தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் புதுச்சேரி வந்து அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை அவர்கள் சட்டசபை வளாகத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வத்தை சந்தித்து பேசினர். அப்போது சட்டசபை கட்டிடம் வடிவமைப்பு தொடர்பாக மின்னணு திரையில் காட்சிப்படுத்தினர்.

இதில் புதிய கட்டிடங்கள், எந்தெந்த தளத்தில் என்னென்ன கட்டிடங்கள் வரும், அதன் அமைப்பு, அறையின் மாதிரி வடிவம் போன்றவற்றை பார்வையிட்டனர். அப்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

அதன்படி மாற்றியமைக்கும் பணியை தனியார் நிறுவனத்தினர் தொடங்கியுள்ளனர். ஒரிரு நாளில் கட்டிட வடிவமைப்பில் சில மாற்றங்களை செய்த பின்னர் அது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சபாநாயகர் செல்வம் கூறினார்.

இந்த ஆலோசனையின் போது பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, பொறியாளர் சேகர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்