புயல், மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை

புயல் மழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

Update: 2022-12-08 15:43 GMT

புதுச்சேரி

புயல் மழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

அரசுத் துறைகள்

முன்னாள் ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு உதவிடும் விதமாக கொடிநாள் நிதி வசூல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ரூ.37 லட்சம் நிதி வசூல் செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ரூ.49.50 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கொடிநாளை முன்னிட்டு அதிக நிதி வசூல் செய்த அரசுத் துறைகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி முதல்- அமைச்சரின் அலுவலகத்தில் நடந்தது. முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். இதில் முதல் பரிசு கல்வித்துறை (ரூ.10.9 லட்சம்), 2-வது பரிசு வருவாய்த்துறை (3.17 லட்சம்), 3-வது பரிசு காவல்துறை (2.97 லட்சம்) மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் (ரூ.5.66 லட்சம்), மத்திய அரசு நிறுவனங்களான ஜிப்மர் (3.76 லட்சம்), புதுவை பல்கலைக்கழகம் (1.44 லட்சம்) ஆகியவற்றுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி கேடயங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் நேரு, ஜான்குமார், நிதித்துறை செயலாளர் ராஜூ, போலீஸ் டி.ஜி.பி. ஆனந்தமோகன், அரசு செயலாளர் பத்மா ஜெய்ஸ்வால், கலெக்டர் வல்லவன், முப்படை நலத்துறை இயக்குனர் சந்திரகுமரன், கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்பின் முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

அதிக நிதியுதவி

நாட்டின் பாதுபாப்புக்காக எல்லைப் பகுதியில் முப்படை வீரர்கள் தமது இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் பணியில் ஈடுபட்டுள்ளனர். உயிர் மற்றும் உடலுறுப்புகளை இழந்து வாழும் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் உதவிட கொடிநாள் நிதி அளித்து உதவி செய்ய வேண்டியது நமது கடமை.

மழை, வெயில், குளிர் என பல்வேறு பருவநிலைகளை கடந்து குடும்பத்தை மறந்து நமக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்வது நமது பொறுப்பு. அவர்களுக்கு உதவிட அரசு துறைகள், தனியார் மற்றும் பொதுமக்கள் அதிக நிதியுதவி வழங்க வேண்டும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

அவரிடம் புயல் எச்சரிக்கை தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் பதில் அளிக்கும்போது, 'புயல், மழையை எதிர்கொள்ள அரசு சார்பில் தேவையான முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அனைத்துத்துறை அதிகாரிகளையும் அழைத்து கூட்டம் நடத்தி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து மழையின் தன்மையை அறிந்து முடிவெடுக்கப்படும்' என்றார்.

இடஒதுக்கீடு

காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில், போலீசாருக்கு இடஒதுக்கீடு (மிகவும் பிற்படுத்தப்பட்டோர்) வழங்குவதில் மத்திய தீர்ப்பாணையம் வழங்கிய தீர்ப்பு அமல்படுத்தப்படுமா? என்ற கேள்விக்கு உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்