மீனவர் வலையில் அதிகமாக சிக்கிய கணவா மீன்கள்

புதுவையில் தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் வலையில் கணவா மீன்கள் அதிக அளவில் சிக்கின.

Update: 2023-06-16 18:08 GMT

புதுச்சேரி

தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் வலையில் கணவா மீன்கள் அதிக அளவில் சிக்கின.

தடைக்காலம்

புதுவையில் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை வங்கக்கடலில் மீன்பிடி தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடைக்காலத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்லாத மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தடைக்காலத்தில் புதுவை மக்கள் வெளியூர்களில் இருந்து விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட மீன்களையே அதிக அளவில் வாங்கி சாப்பிட்டனர். இதனால் மீன்களின் விலையும் வழக்கத்தைவிட அதிகமாக இருந்து வந்தது.

கரை திரும்பினர்

இந்தநிலையில் கடந்த 14-ந்தேதி நள்ளிரவுடன் 61 நாட்கள் கடைபிடிக்கப்பட்ட தடைக்காலம் நிறைவடைந்தது. அன்றையதினம் மீனவர்களை ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்திலிருந்து வழியனுப்பி வைத்தார்.

அவ்வாறு ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற மீனவர்களில் சிலர் இன்று கரை திரும்பினார்கள். அவர்களது வலைகளில் கணவா மீன்கள் அதிக அளவில் சிக்கியிருந்தன. சுமார் 15 டன் கணவா மீன்கள் சிக்கின. மேலும் பிற மீன்களையும் பிடித்து வந்தனர்.

மீனவர்கள் மகிழ்ச்சி

அவற்றை வியாபாரிகள் போட்டிபோட்டு ஏலத்தில் வாங்கி சென்றனர். எதிர்பார்த்ததுபோல் மீன்கள் கிடைத்ததால் மீனவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். ஒரு கிலோ கணவா மீன் ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டன. மீதமுள்ள மீனவர்கள் இன்றோ, நாளையோ கரை திரும்ப உள்ளனர். இதன் மூலம் புதுவையில் படிப்படியாக மீன்விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்