போலீசாருக்கான மருத்துவக் கடன் ரூ.5 லட்சமாக உயர்வு

புதுவையில் போலீசாருக்கான மருத்துவ கடன் ரூ.5 லட்சமாக உயர்த்த காவலர் நலச்சங்க பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Update: 2023-07-19 17:19 GMT

புதுச்சேரி

போலீசாருக்கான மருத்துவ கடன் ரூ.5 லட்சமாக உயர்த்த காவலர் நலச்சங்க பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பொதுக்குழு கூட்டம்

புதுச்சேரி காவலர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கருத்தரங்கில் இன்று நடந்தது. விழாவுக்கு போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீனிவாசன் தலைமை தாங்கினார். சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரிஜேந்திரகுமார் யாதவ் முன்னிலை வகித்தார். தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் வரவேற்றார். காவலர் பயிற்சி பள்ளி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் ஆண்டறிக்கை வாசித்தார்.

கூட்டத்தில், காவலர் நலச்சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி தலைவராக டி.ஜி.பி., செயலாளராக காவல்துறை தலைமையக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு, பொருளாளராக காவலர் பயிற்சி பள்ளி போலீஸ் சூப்பிரண்டு, உறுப்பினர்களாக போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம், இன்ஸ்பெக்டர் கணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் பிரியா, உதவி சப்-இன்ஸ்பெக்டர் முருகசாமி, ஏட்டுகள் அருள், முருகன், காவலர் ஐஸ்வர்யா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

ரூ.5 லட்சமாக உயர்வு

கூட்டத்தில், காவலர்களுக்கான நலச்சங்க மாதாந்திர சந்தா தொகையை உயர்த்துதல், காவல்துறையில் பணியாற்றுபவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்குதல், காவலர்களுக்கான மருத்துவ கடன் உதவித்தொகை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக 2019 முதல் 2023 வரை காவல் துறையில் பணியாற்றி உயிரிழந்த 39 காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. முடிவில் சப்-இன்ஸ்பெக்டர் ஜானகி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்