கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

காரைக்கால் மாவட்டத்தில் கல்வி, வளர்ச்சி பணிக்கு தனி கவனம் செலுத்தப்படுவதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-30 17:13 GMT

காரைக்கால்

காரைக்கால் மாவட்டத்தில் கல்வி, வளர்ச்சி பணிக்கு தனி கவனம் செலுத்தப்படுவதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று அரசு முறை பயணமாக காரைக்கால் வருகை தந்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தந்த கவர்னரை அமைச்சர் சந்திரபிரியங்கா, நாஜிம் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணிஷ் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து அரசு துறை அதிகாரிகளுடன், காரைக்கால் மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் கவர்னர் கலந்துகொண்டார்.

கூட்டத்தில், மாவட்டத்தில்நடைபெறும் அரசின் வளர்ச்சிபணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தடைபட்டு நிற்கும் அரசுப்பணிகள் எதனால் பாதியில் நிற்கிறது என்றும், அதனை உடனே சரிசெய்யவும் உத்தரவிட்டார்.

கூட்டத்தின் முடிவில், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

காலி பணியிடங்கள் நிரப்பப்படும்

காரைக்கால் மாவட்டத்தில், புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணி நிறைவுபெற்றுள்ளது. விரைவில், தண்ணீர் இணைப்பு வழங்கப்படும். தோண்டப்பட்ட சாலைகள் சரி செய்யப்படும். பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். அரசு ஆஸ்பத்திரி, போலீசில் உள்ள காலிப்பணியிடங்களும் சரிசெய்யப்படும். புதிதாக பணியில் சேருபவர்கள் புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு பலர் வர மறுக்கிறார்கள். இது குறித்து நிரந்தர தீர்வு காணப்படும்.

கவர்னர் அடிக்கடி காரைக்கால் வராவிட்டாலும், கலெக்டர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் மூலம் இங்கு நடைபெறும் வளர்ச்சி பணிகளை அறிந்து வருகிறேன். ஆன்லைன் மூலம் கவர்னரிடம்தான் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்கவேண்டும் என்று இல்லை. மாதந்தோறும் 15-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் மக்கள் குறைதீர் முகாமிலும் மக்கள் புகார் தெரிவிக்கலாம். இந்த முகாமை கலெக்டர் குலோத்துங்கன் நன்றாக நடத்தி வருகிறார்.

தனி கவனம் செலுத்தப்படுகிறது

காரைக்காலில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளது என அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், கலெக்டர் உள்ளிட்டோரிடம் அடிக்கடி கேட்டு வருகிறோம். இந்த மாவட்ட வளர்ச்சியில் தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. காரைக்கால் எந்த விதத்திலும் புறக்கணிக்கப்படாது.

இவ்வாறு கவர்னர் கூறினார்.

காரைக்காலில் சாலைகள் எங்கும் பேனர்கள் வைப்பது அதிகரித்து வருவது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, விரைவில் சரி செய்யப்படும் என்று கவர்னர் கூறினார். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நடைபயணம் குறித்து, கேட்டதற்கு, கவர்னரிடம் அரசியல் பற்றி கேட்க கூடாது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

நாஜிம் எம்.எல்.ஏ. மனு

ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட கவர்னரிடம், உயர்கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கியதைபோல், வேலை வாய்ப்பிலும் மக்கள் தொகைக்கேற்ப, காரைக்கால் பகுதிக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கூறி நாஜிம் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்