அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தினமும் 'நீட்' பயிற்சி

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு தினமும் பயிற்சி அளிக்கவேண்டும் என்று முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2022-09-20 16:16 GMT

புதுச்சேரி

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு தினமும் பயிற்சி அளிக்கவேண்டும் என்று முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

23-வது இடம்

'நீட்' தேர்வு தேர்ச்சியில் பெரும்பாலான மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை விட புதுச்சேரி பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த தேர்வில் பங்கேற்ற 5 ஆயிரத்து 511 பேரில் 2 ஆயிரத்து 899 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 52.6 சதவீதம் பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். இது தேசிய சராசரியான 56.3 சதவீதத்தைவிட குறைவாகும்.

அகில இந்திய அளவில் புதுச்சேரி 23-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த ஆண்டின் தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது. நீட் தேர்வில் எவ்வளவு பேர் புதுவை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற புள்ளி விவரத்தை அரசு வெளியிடவில்லை.

2 மணிநேரம் பயிற்சி

தனியார் பள்ளிகளில் இருந்து கிடைக்கும் விவரங்களில் இருந்து புதுச்சேரியில் தேர்ச்சி பெற்றவர்களில் பெரும்பாலானோர் தனியார் பள்ளி மாணவர்கள் என்று தெரிகிறது. அரசுப்பள்ளி மாணவர்கள் பலர் தேர்ச்சி பெறவில்லை.

சமூக நீதியை நிலைநாட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும். மாணவர்களுக்கு பிளஸ்-1 வகுப்பு முதல் தினமும் மாலையில் 2 மணிநேரம் நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்