பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேர் கைது

பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்றதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-23 15:53 GMT

அரியாங்குப்பம்

பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்றதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா விற்பனை

புதுவையில் சுற்றுலா பயணிகள், வடமாநில தொழிலாளர்களை குறிவைத்து கஞ்சா விற்கப்பட்டு வருகிறது. இதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்த போதிலும் போலீசார் கண்ணில் மண்ணை தூவிவிட்டு நூதன முறையில் கஞ்சா விற்பது தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் தவளக்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ஆண்டியார்பாளையம் மகாலட்சுமி நகர் சாராயக்கடை பின்புறத்தில் வைத்து பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் ஹரிஷ், வசந்தராஜ் ஆகியோர் மகாலட்சுமிநகர் பகுதிக்கு சென்றனர். அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற 2 வாலிபர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.

20 பேர் கைது

விசாரணையில் அவர்கள் கரிக்கலாம்பாக்கம் தினேஷ் (வயது 22), நல்லவாடு சுனாமி குடியிருப்பு மலையாளத்தான் (20) என்பதும், பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. பின்னர் அவர்களை கைது செய்து, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சா, 500 ரொக்க பணம் மற்றும் 2 செல்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தவளக்குப்பம் பகுதியில் கடந்த 4 மாதத்தில் கஞ்சா விற்றதாக 20 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கிருமாம்பாக்கம்

இதேபோல் கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் லூர்துநாதன் மற்றும் போலீசார் மணப்பட்டு-புதுக்குப்பம் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரி சாரம் தென்றல்நகர் பகுதியை சேர்ந்த வில்லியம்ஸ் எடிசன் (24) என்பவர் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்தார். அவரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 135 கிராம் கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்