ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு ஒரே நாளில் 192 குழந்தைகள் அனுமதி

புதுச்சேரியில் ஒரே நாளில் 192 குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-17 16:09 GMT

புதுச்சேரி

புதுச்சேரியில் ஒரே நாளில் 192 குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

நிரம்பி வழியும் படுக்கைகள்

புதுவையில் தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக வைரஸ் காய்ச்சல் (ப்ளூ) வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சளி, இருமல் மற்றும் காய்ச்சலுடன் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

இதனால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக வருவோரின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. எல்லைப்பிள்ளை சாவடியில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் குழந்தை சிகிச்சை பிரிவில் உள்ள அனைத்து படுக்கைகளும் நிரம்பி வழிகின்றன.

காய்ச்சல் பரவலை தடுக்க சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு ஆஸ்பத்திரிகளில் 24 மணி நேர சிறப்பு சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. காய்ச்சல் பரவலை தடுக்கும் விதமாக 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. பொது இடங்களில் எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு நிருபர்களிடம் கூறியதாவது:-

192 குழந்தைகள்

புதுவையில் கடந்த 10 நாட்களாக காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. குழந்தைகள், பெரியவர்கள் காய்ச்சலுடன் ஆஸ்பத்திரிக்கு வருகின்றனர். குறிப்பாக, ராஜீவ்காந்தி குழந்தைகள் ஆஸ்பத்திரியில் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு ஒரு நாளைக்கு 500 முதல் 600 குழந்தைகளும், அரசு ஆஸ்பத்திரியில் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு ஒரு நாளைக்கு 50 முதல் 70 பேரும் வருகின்றனர்.

இதனால் ஒவ்வொரு ஆஸ்பத்திரியிலும் தனியாக காய்ச்சல் மையம், சிகிச்சை பிரிவு தொடங்கியுள்ளோம். ராஜீவ்காந்தி குழந்தைகள் ஆஸ்பத்திரியில் 120 படுக்கைகள் உள்ளன. நேற்று ஒரே நாளில் 192 குழந்தைகள் உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேபோல், அரசு ஆஸ்பத்திரியில் 12 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் யாருக்காவது காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

எந்த வகை காய்ச்சல்?

இது சாதாரண வைரஸ் காய்ச்சலாகத் தான் தெரிகிறது. இருப்பினும், ஸ்வைன் ப்ளூ, (பன்றி காய்ச்சல்), இன்புளுயன்சா, மலேரியா, சிக்குன் குனியா, டெங்கு காய்ச்சல் உள்ளதா? என பார்ப்பதற்கு போதுமான பரிசோதனை கருவிகள் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது.

ஜிப்மரிலும், இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும் பரிசோதனை செய்து வருகிறார்கள். அதன் முடிவுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் தெரியவரும். எதுவானாலும் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறை எடுத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்