வயநாடு நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 333 ஆக உயர்வு

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி 4வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Update: 2024-08-02 02:03 GMT

திருவனந்தபுரம்,


Live Updates
2024-08-02 17:03 GMT

வயநாடு நிலச்சரிவில் அட்டமாலா வனப்பகுதியில் சிக்கித்தவித்த பழங்குடியின குடும்பத்தைச்சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 6 பேரை 8 மணி நேரம் போராடி வனத்துறை அதிகாரிகள் மீட்டனர். எக்ஸ் தளத்தில் புகைப்படத்தை பகிர்ந்து இத்தகைய இருண்ட காலத்திலும் இதுபோன்ற ஹீரோக்களால் கேரளாவின் புகழ் பிரகாசமாக ஜொலிக்கிறது என அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.


2024-08-02 16:39 GMT

‘மாநில அரசுகளின் அலட்சியமே நிலச்சரிவுக்கு காரணம்’ - ராஜீவ் சந்திரசேகர்

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கும், அதனை தொடர்ந்து ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கும் கேரள மாநிலத்தை 2009-ம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வந்த மாநில அரசுகளே காரணம் என முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான ராஜீவ் சந்திரசேகர் விமர்சித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘வயநாட்டில் நடந்தது ஒரு சோகம் அல்ல, அது ஒரு குற்றச்செயல்’ என்று குறிப்பிட்டார். மேலும் அங்கு அலட்சியம் நடந்துள்ளது என்றும், இதற்கு பொறுப்பானவர்கள் யார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது என்றும் அவர் கூறினார். 

2024-08-02 12:30 GMT

வயநாடு நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 333 ஆக உயர்வு

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 333 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 281 பேர் மாயமானதாக கூறப்படும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்திய ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை, கடற்படையினர், வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்ட கருவிகள் மூலம் காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

தெர்மல் ஸ்கேனர் கருவியை கொண்டு தேடும்போது, இடிபாடுகளுக்கிடையே சிலர் இன்னும் உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

2024-08-02 11:40 GMT

நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் அடையாளம் தெரியாத உடல்கள் பொது மயானத்தில் அடக்கம்

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் அடையாளம் தெரியாதவர்களின் உடல்கள் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது மேப்படி கிராமத்தில் 74 அடையாளம் தெரியாத உடல்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், தேவையான நடைமுறைகள் முடிந்த பிறகு உடல்கள் அடக்கம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல்களை அடக்கம் செய்வதற்கு கல்பெட்டா நகராட்சி, வைத்திரி, முட்டில், கணியம்பட்டா, பாடிஞ்சதாரா, தொண்டர்நாடு, எடவாகா, முள்ளங்கொல்லி ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் உள்ள மயானங்களில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உடல்களை முறையாக பதிவு செய்து, அடக்கம் செய்யும் பணிகளை மேற்பார்வையிடும் அதிகாரியாக பதிவுத்துறை ஆய்வாளர் ஸ்ரீதன்யா சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். 

2024-08-02 09:01 GMT

நிலச்சரிவில் உயிரிழந்த 199 பேரின் உடல்களுக்கு உடற்கூராய்வு நிறைவு - வீணா ஜார்ஜ்

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 199 பேரின் உடல்களுக்கு உடற்கூராய்வு நிறைவடைந்துள்ளதாக கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு ஐ.சி.யூ.க்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் 130 உடல் பாகங்களின் டி.என்.ஏ. மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், சடலங்களுக்கு இறுதிச் சடங்கு செய்ய தேசிய, சர்வதேச வழிகாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதாகவும் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 

2024-08-02 06:44 GMT

4 நாட்களுக்குபின் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிருடன் மீட்பு

வயநாடு நிலச்சரிவில் சிக்கிய ஒரேகுடும்பத்தை சேர்ந்த 4 பேர் 4 நாட்களுக்குபின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சூரல்மலையில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமம் படவெட்டிகன்னு.

இந்த கிராமமும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த ஜானி தனது குடும்பத்துடன் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டார். நிலச்சரிவு ஏற்பட்டபோது அவர் குடும்பத்துடன் மலை உச்சிக்கு சென்று தப்பியிருக்கலாம் என தகவல் வெளியான நிலையில் ஜானி தனது குடும்பத்துடன் வீட்டிலேயே இருந்துள்ளார். தற்போது 4 நாட்கள் கழித்து ஜானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 4 பேரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

ஜானி குடும்பத்தில் 2 ஆண்கள், பெண், சிறுமி மொத்தம் 4 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதில் சிறுமிக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. மீட்கப்பட்ட அனைவரும் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, காயமடைந்த சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீட்கப்பட்ட 4 பேரும் கடந்த 4 நாட்களாக தங்கள் வீட்டிலேயே இருந்துள்ளனர். நிலச்சரிவில் ஜெனரேட்டர் பாதிக்கப்படாததால் 4 நாட்களும் ஜானி வீட்டில் மின் இணைப்பு இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

2024-08-02 04:56 GMT

வயநாடு நிலச்சரிவு: ஜோ பைடன் இரங்கல்

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 300-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3,500-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் தொடர்ந்து 4-வது நாளாக மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். நிலச்சரிவில் அன்புக்குரியோரை இழந்துவாடும் குடும்பங்களுக்கு எனது பிரார்த்தனைகள். பேரிடரின்போது மீட்புப் பணிகளில் ஈடுபடும் வீரர்களின் தைரியத்திற்கு பாராட்டுகள்” என்று தெரிவித்துள்ளார்.

2024-08-02 04:49 GMT

பலி எண்ணிக்கை உயர்வு

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 318 ஆக அதிகரித்துள்ளது

2024-08-02 03:00 GMT

வயநாடு நிலச்சரிவு: மீட்புப் பணியில் ராணுவத்துடன் கைக்கோர்த்த இஸ்ரோ

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் கடந்த 29-ம் தேதி இரவு கனமழை பெய்தது. கனமழை காரணமாக 30-ம் தேதி நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 6 வரை அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது.

கனமழை, நிலச்சரிவுடன் சாளியாற்றில் காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டது. இதன் காரணமாக முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய கிராமங்கள் நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்தன. இந்த கோர நிலச்சரிவில் சிக்கி இதுவரை 316 பேர் உயிரிழந்துள்ளனர். 3,500-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 4-வது நாளாக மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி பகுதியில் ராணுவத்துடன் இணைந்து இஸ்ரோ மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மண்சரிவு ஏற்பட்ட மலைப் பகுதியை ரிசாட் சார் (RISAT SAR) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகைப்படமாக எடுத்து அதன் முழு தகவல்களை இஸ்ரோ வழங்கி உள்ளது.

இஸ்ரோ தகவலின்படி, மண் சரிவு ஆரம்பப் புள்ளியில் இருந்து 8 கிலோ மீட்டர் பயணித்து முடிந்திருக்கிறது என்றும் ஒட்டுமொத்தமாக 86,000 சதுர அடி பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் வழங்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு பாதிப்பு குறித்து விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் நேரில் ஆய்வு செய்ய கேரள அரசு தலைமைச் செயலாளர் நேற்று தடை விதித்திருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2024-08-02 02:32 GMT

தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் தேடும் பணி

நிலச்சரிவால் மண்ணில் புதைந்தவர்களை தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் தேடும் பணி தீவிரம். சேறு, சகதிகளில் யாரேனும் சிக்கி இருந்தால் தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் கண்டறிய முடியும்

Tags:    

மேலும் செய்திகள்