உ.பி. ஹத்ராஸ் சம்பவம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி இரங்கல்

உ.பி. ஹத்ராஸ் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-02 16:00 GMT

புதுடெல்லி,

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் இன்று இந்து மத சத்சங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற நிலையில், நிகழ்ச்சி முடிந்து மக்கள் புறப்பட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. 

இந்நிலையில் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் சத்சங்கத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமான பக்தர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று நம்புகிறேன்.

காயமடைந்தவர்களுக்கு அனைத்து விதமான சிகிச்சையும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணமும் வழங்க அரசு நிர்வாகத்திடம் கேட்டுக் கொள்கிறேன். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் 'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்தவர்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்