தேசிய பாதுகாப்புப்படைக்கு புதிய தலைவர் நியமனம் - காரணம் என்ன?

தேசிய பாதுகாப்புப்படையின் தலைவராக சீனிவாசன் ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2024-08-27 18:05 GMT

டெல்லி,

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய காவல் ஆயுதப்படைப்பிரிவுகளில் தேசிய பாதுகாப்புப்படையும் ஒன்று. இந்த பாதுகாப்புப்படை நாட்டில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், பிரதமர் உள்பட நாட்டின் முக்கிய தலைவர்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் அமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது.

இதனிடையே, தேசிய பாதுகாப்புப்படையின் தலைவராக செயல்பட்டு வந்தவர் நளின் பிரகத். கடந்த 3 மாதங்களுக்குமுன் நியமிக்கப்பட்ட நளின் பிரகத் தேசிய பாதுகாப்புப்படையின் தலைவராக 2028 ஆகஸ்ட் 31 வரை செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஜம்மு-காஷ்மீரில் சமீபகாலமாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் நளின் பிரகத் ஜம்மு-காஷ்மீர் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வரும் 1ம் தேதி முதல் ஜம்மு காஷ்மீர் டிஜிபியாக பணியாற்ற உள்ளார்.

இந்நிலையில், நளின் பிரகத் பணியிடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து தேசிய பாதுகாப்புப்படையின் புதிய தலைவராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். சீனிவாசனின் நியமன அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. பீகார் பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரியான சீனிவாசன் வரும் 31ம் தேதி முதல் தேசிய பாதுகாப்புப்படையின் தலைவராக செயல்படுவார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்