ரஷியா, ஆஸ்திரியாவுக்கு பயணம் - பிரதமர் மோடி நெகிழ்ச்சி பதிவு

பிரதமர் மோடி இன்று ரஷியா செல்கிறார். அங்கு அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார்.;

Update:2024-07-08 11:49 IST

கோப்புப்படம்

புதுடெல்லி,

இந்தியா-ரஷியா இடையே ஆண்டுதோறும் உச்சி மாநாடு நடக்கிறது. இதில் இரு நாட்டு தலைவர்களும் பங்கேற்று இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி உறவுகளை வலுப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் இரு நாட்டு உச்சி மாநாடு மாஸ்கோவில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்திருந்தார்.

அதை ஏற்று பிரதமர் மோடி இன்று (திங்கட்கிழமை) ரஷியா செல்கிறார். இன்றும், நாளையும் அங்கே பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் மோடி, அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தையும் நடத்துகிறார்.

இதில் பிராந்திய, சர்வதேச நலன் சார்ந்த பிரச்சினைகள் முக்கிய இடம்பெறும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. மேலும். பாதுகாப்பு, கல்வி, முதலீடு, கலாசாரம், மக்களிடையிலான உறவுகள் உள்ளிட்ட இருதரப்பு உறவின் அனைத்து அம்சங்கள் பற்றியும் அவர்கள் விவாதிப்பார்கள் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரதமர் மோடி கடந்த 2019-ம் ஆண்டு கடைசியாக ரஷியா சென்றிருந்தார். அதன்பிறகு தற்போதுதான் மீண்டும் அவர் ரஷியா செல்கிறார். ரஷியா-உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியா செல்கிறார். 10-ந் தேதி வரை அங்கு இருக்கும் பிரதமர் மோடி, அந்த நாட்டு தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். குறிப்பாக ஆஸ்திரியா அதிபர் அலெக்சாண்டர் வான்டர் பெல்லன் மற்றும் பிரதமர் கார்ல் நெகம்மருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர் இருநாட்டு தொழில் அதிபர்கள் மாநாட்டில் இந்திய-ஆஸ்திரிய பிரதமர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்நிலையில் ரஷியா, ஆஸ்திரியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது தொடர்பாக பிரதமர் மோடி நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், "அடுத்த மூன்று நாட்களில், ரஷியா மற்றும் ஆஸ்திரியாவில் இருப்பேன். இந்தியா காலப்போக்கில் நட்புறவை சோதித்துள்ள இந்த நாடுகளுடன் உறவுகளை ஆழப்படுத்த இந்த பயணங்கள் ஒரு அருமையான வாய்ப்பாக இருக்கும். இந்த நாடுகளில் வசிக்கும் இந்திய சமூகத்தினருடன் தொடர்பு கொள்வதையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்