ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு
ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்பட்டது.;
திருவனந்தபுரம்
:சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசன் காலத்தில் அதிக நாட்கள் திறக்கப்பட்டிருக்கும். மேலும் மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறந்திருக்கும்.
அதன்படி ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. வருகிற 21-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். அன்றைய தினம் இரவு 10.30 மணிக்கு நடை சாத்தப்படும். அது மட்டுமின்றி புதிய மேல்சாந்திகள் தேர்வு நாளை (17-ந்தேதி) நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்கும் தரிசனம் செய்ய அனுமதி
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. டிசம்பர் மாதம் 26-ந் தேதி மண்டல பூஜையும், வருகிற ஜனவரி மாதம் 14-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும்.
நடப்பு சீசனையொட்டி உடனடி முன்பதிவு வசதி ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டும் தினசரி 80 ஆயிரம் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க கடந்த 5-ந் தேதி முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசின் இந்த முடிவுக்கு பந்தளம் அரச கும்பத்தினர், இந்து அமைப்புகள், அய்யப்பா சேவா சங்கங்கள் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
உடனடி தரிசன வசதியை கடந்த ஆண்டைப் போல் நடைமுறைப்படுத்த அரசுக்கு இந்த அமைப்புகள் அழுத்தம் கொடுத்து வந்தன. இந்த நிலையில் நேற்று சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது பேசிய முதல்-மந்திரி பினராயி விஜயன், ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் வரும் அய்யப்ப பக்தர்களுக்கும் சபரிமலையில் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.