செபி தலைவர் மாதபி புச் விவகாரம்: தனியார் வங்கி அளித்த விளக்கம்
செபி தலைவர் மீது காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டிய நிலையில், இதுதொடர்பாக தனியார் வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.;
புதுடெல்லி,
கடந்தாண்டு ஜனவரி மாதம், அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், வெளிநாடுகளில் போலி நிறுவனங்களை உருவாக்கிய அதானி குழுமம், பலநூறு கோடி ரூபாய் ரகசிய பரிவர்த்தனையில் ஈடுபட்டு பங்குச்சந்தையில் ஊழல் செய்ததாக ஆதாரங்களை வெளியிட்டது. மேலும் அதானியின் போலி நிறுவனம் என்று குற்றச்சாட்டுக்குள்ளான நிறுவனத்தில் செபியின் தலைவராக இருக்கும் மாதவிக்கும் அவரது கணவருக்கும் பங்குகள் இருந்ததாக ஹிண்டன்பர்க் நிறுவனம் கட்டுரை வெளியிட்டிருந்தது.
இந்த சூழலில் பங்குச் சந்தையை ஒழுங்குபடுத்தும் செபி தலைவராக இருக்கும் மாதபி புரி புச், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியிடம் இருந்து ரூ.16.8 கோடி ரூபாயை ஊதியமாக பெற்றிருப்பதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா நேற்று குற்றம் சாட்டி இருந்தார்.
இந்நிலையில் செபி தலைவராக பணியாற்றி வரும் மாதபி புச், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் இருந்து கடந்த 2013 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதி விருப்ப ஓய்வு பெற்றதாக அவ்வங்கி நிர்வாகம் அளித்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓய்வுகால பலன்களை தவிர அவருக்கு ஊதியமோ, இ.எஸ்.ஐ.பி. பலனையோ ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி அல்லது ஐ.சி.ஐ.சி.ஐ. குழும நிறுவனங்கள் வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே காங்கிரஸ் கட்சியின் இந்த குற்றச்சாட்டுக்கு செபி தலைவர் மாதபி புச் தரப்பில் இருந்து விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை.