மொரார்ஜி சாதனையை முறியடிக்கும் நிர்மலா சீதாராமன்

நாடாளுமன்றத்தில் 2024-25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

Update: 2024-07-23 03:10 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ந் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடக்கிறது. இதன் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அவர் தாக்கல் செய்யும் 7-வது பட்ஜெட் இதுவாகும்.

பிரதமர் மோடியின் 3-வது ஆட்சிக்காலத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது. அதேநேரம் இந்த பட்ஜெட் மீது மக்களிடமும் பல்வேறு எதிர்பார்ப்புகள் காணப்படுகிறது. குறிப்பாக, வருமான வரிச்சுமையை குறைக்க வேண்டும் என்பது நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் விலைவாசியை கட்டுப்படுத்த, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க, உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்க அறிவிப்புகள் இடம்பெற வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி விடுவித்தல், ஒப்புதல் வழங்குதல், நிதி ஒதுக்குதல் போன்ற பல்வேறு அறிவிப்புகளை தமிழ்நாடு போன்ற பல்வேறு மாநில அரசுகளும் எதிர்பார்த்து இருக்கின்றன.

இந்த நிலையில், தொடர்ச்சியாக 7 முறை பட்ஜெட் தாக்கல் செய்து மொரார்ஜி தேசாயின் சாதனையை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று முறியடிக்கிறார். தொடர்ச்சியாக 5 முறை முழு பட்ஜெட்டும், ஒருமுறை இடைக்கால பட்ஜெட்டும் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் 6 முறை தொடர்ச்சியாகவும், ஒட்டுமொத்தமாக 10 முறையும் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்