மேகவெடிப்பு.. திடீர் வெள்ளம்: இமாச்சல பிரதேசத்தின் முக்கிய சாலையில் போக்குவரத்து துண்டிப்பு

லாஹவுல் ஸ்பிட்டியில் இருந்து மணாலிக்கு செல்லும் வாகனங்கள், அடல் சுரங்கப்பாதையின் வடக்கு வாசல் வழியாக ரோத்தங் நோக்கி திருப்பிவிடப்பட்டன.

Update: 2024-07-25 08:35 GMT

சிம்லா:

இமாச்சல பிரதேசத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மணாலி பகுதியில் நேற்று இரவு மேகவெடிப்பு காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மலைச்சரிவுகளில் இருந்து காட்டாறு போல் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்து வந்ததால் சாலைகளில் கற்கள் உருண்டு விழுந்தன. நேரம் செல்லச் செல்ல குவியல் குவியலாக கற்கள் விழுந்ததால் சுமார் 15 சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

குறிப்பாக, மணாலியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் (லே-மணாலி வழித்தடம்) தண்டி என்ற பகுதிக்கும் பால்சான் பாலத்திற்கும் இடையிலான பாதை மூடப்பட்டது. லாஹவுல் ஸ்பிட்டியில் இருந்து மணாலிக்கு செல்லும் வாகனங்கள், அடல் சுரங்கப்பாதையின் வடக்கு வாசல் வழியாக ரோத்தங் நோக்கி திருப்பிவிடப்பட்டன.

அந்த வழித்தடத்தில் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும், மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனம் ஓட்ட வேண்டும், வழியில் ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

மேகவெடிப்பு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக நேற்று இரவு மாநிலம் முழுவதிலும் 62 மின்மாற்றிகள் பழுதடைந்தன. இந்த இயற்கை பேரிடரால் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. ஒரு மின் உற்பத்தி நிலையம் மற்றும் சில வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேக வெடிப்பு என்பது ஒரு குறுகிய காலத்தில் அதிக அளவு மழைப்பொழிவு ஆகும். சில நேரங்களில் ஆலங்கட்டி மற்றும் இடியுடன்கூடிய பலத்த மழை கொட்டித்தீர்க்கும்.

இமாச்சல பிரதேசத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து மழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளதாக அவசரகால மீட்பு மையம் தெரிவித்துள்ளது. அரசுக்கு சுமார் 389 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுள்ளதாகவும் கூறி உள்ளது.

செய்திகளை எக்ஸ் தளத்தில் அறிந்துகொள்ள... https://x.com/dinathanthi

Tags:    

மேலும் செய்திகள்