சொத்து தகராறு: தந்தையை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபர்

மூத்த மகனுடன் சேர்ந்து வீட்டை விற்க முயற்சித்து வந்த தந்தையை இளைய மகன் கொன்ற சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2024-08-04 07:16 IST

டெல்லி,

கிழக்கு டெல்லியின் அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் கவுதம் தாக்கூர், ஓய்வு பெற்ற மெக்கானிக். இவரது இளைய மகன் மகேஷ் தாக்கூர். கவுதம் தாக்கூர், தனது சொத்தில் ஒரு பகுதியை விற்று, அசோக் நகரில் தனது மூத்த மகனுக்கு புதிதாக வீடு வாங்கி கொடுத்துள்ளார். இது தொடர்பாக இளைய மகனான மகேஷ், தனது தந்தையிடம் தகராறு செய்துள்ளார்.

இந்த நிலையில், குடும்பம் தற்போது வசிக்கும் வீட்டை தனது மூத்த மகனுடன் சேர்ந்து விற்பதற்கு கவுதம் தாக்கூர் முயற்சி செய்து வந்துள்ளார். வீட்டை விற்பதற்காக மகேஷுக்கு தெரியாமல் மறைமுகமாக தந்தையும், மூத்த மகனும் திட்டமிட்டு வந்துள்ளனர்.

இதனை அறிந்த மகேஷ், தன்னை தனது தந்தை ஏமாற்றி வருவதை எண்ணி மனம் வருந்தியுள்ளார். அத்துடன், தனக்கு துரோகம் செய்த தந்தையை கொலை செய்ய மகேஷ் திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தந்தையை கத்தியால் குத்தி மகேஷ் கொலை செய்தார். பின்னர், கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை பக்கத்து வீட்டின் மேல் உள்ள தண்ணீர் தொட்டியில் வீசியுள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மகேஷிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தனது தந்தையை கொலை செய்ததை மகேஷ் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து மகேஷை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்