கேரள நடிகைகள் புகார்: 7 அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு - பினராயி விஜயன் அறிவிப்பு

கேரள திரைத்துறையில் நடிகைகளால் முன்வைக்கப்படும் பரபரப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க 7 பேர் கொண்ட குழு அமைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-08-25 16:05 GMT

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடிகா் திலீப் உள்ளிட்ட பலா் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டனா். இதைத் தொடர்ந்து கேரள திரைப்படத் துறையில் பாலியல் துன்புறுத்தல் குறித்த பிரச்சினைகளை ஆய்வு செய்வதற்காக, நீதிபதி ஹேமா தலைமையில் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. மலையாள திரைப்படத் துறையில் பணிபுரியும் பெண்களின் நிலைமைகள் குறித்து 51 பேரிடம் வாக்குமூலம் பெற்று, ஆய்வு மேற்கொண்ட ஹேமா கமிட்டி, மாநில அரசிடம் சமீபத்தில் அறிக்கையை சமர்ப்பித்தது.

இதில், கேரள திரைப்படத் துறையானது ஒருசில நடிகர்கள், தயாரிப்பாளர்கள் கட்டுப்பாட்டில் இயங்குவதாகவும், புதிதாக வரும் நடிகைகள் வாய்ப்புக்காக எதற்கும் சரணடைவார்கள் என்ற எண்ணம் துறையில் நிலவுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில், கேரள திரைத் துறையில் நடிகைகளால் முன்வைக்கப்படும் பரபரப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க 7 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார். அதன்படி, கேரள காவல் துறை தலைவர் ஸ்ப்ரஜன் குமார் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில், 4 மூத்த பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 7 பேர் இடம்பெற்றுள்ளனர்.

கூடுதல் காவல் துறை தலைமை இயக்குனர் எச்.வெங்கடேசன் குழுவின் செயல்பாட்டைக் கண்காணிப்பார் எனவும் கேரள முதல்-மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது.  காவல் துறை தலைவர் ஸ்ப்ரஜன் குமார், காவல்துறைத் துணைத்தலைவர் (டிஐஜி) அஜிதா பேகம், குற்றப் புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் மெரின் ஜோசப், கடலோர காவல் துறை துணைத் தலைவர் பூங்குழலி, கேரள போலீஸ் அகாதெமி உதவி இயக்குநர் ஐஸ்வர்யா டோங்ரே, காவல் துறை துணைத் தலைவர் அஜித் வி, குற்றப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் மதுசூதனன் ஆகியோர் சிறப்பு குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

தங்களுக்கு இழைக்கப்பட்ட துன்புறுத்தல், பாலியல் தொல்லை குறித்து நடிகைகள் பேட்டி அளித்தாலும், புகார் அளிக்க முன்வராததால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரங்களில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க 7 பேர் கொண்ட குழு உரிய பணிகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்