என்.எச்.ஆர்.சி. தலைவராக முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி நியமனம்
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற ராமசுப்ரமணியனை தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவராக ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று நியமித்து உள்ளார்.
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ராமசுப்ரமணியன். அவரை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்.எச்.ஆர்.சி.) தலைவராக, ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று நியமித்து உள்ளார்.
இதேபோன்று, பிரியங்க் கனூங்கோ மற்றும் நீதிபதி பித்யுத் ரஞ்சன் சாரங்கி (ஓய்வு) ஆகியோர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான தகவலை ஆணையம் தன்னுடைய எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்டு உள்ளது.
சென்னை சட்ட கல்லூரியில் சட்டம் படித்தவரான ராமசுப்ரமணியன், 1958-ம் ஆண்டு ஜூன் 30-ல் பிறந்தவர். 1983-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந்தேதி வழக்கறிஞர்கள் அமைப்பின் உறுப்பினரானார்.
சென்னை ஐகோர்ட்டில் 23 ஆண்டுகளாக பணியாற்றிய அவர், 2006-ம் ஆண்டு ஜூலை 31-ந்தேதி சென்னை ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2009-ம் ஆண்டு நவம்பர் 9-ந்தேதி நிரந்தர நீதிபதியானார்.