காலிஸ்தானிய பயங்கரவாதி லண்டாவின் முக்கிய உதவியாளர் கைது; என்.ஐ.ஏ. நடவடிக்கை
பஞ்சாப்பின் குர்தாஸ்பூர் பகுதியில் வசித்து வந்த ஜதீந்தர் சிங்கை பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.
புதுடெல்லி,
வெளிநாட்டை அடிப்படையாக கொண்டு செயல்படும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு பப்பர் கல்சா இன்டர்நேசனல். இதனை தோற்றுவித்தவர் லக்பீர் சிங் என்ற லண்டா.
காலிஸ்தானிய பயங்கரவாதியான இவருடைய நெருங்கிய கூட்டாளி பசிதர் சிங் என்ற பவிதர் படாலா. லண்டா மற்றும் படாலாவின் முக்கிய உதவியாளராக இருந்தவர் ஜதீந்தர் சிங் என்ற ஜோதி. பஞ்சாப்பின் குர்தாஸ்பூர் பகுதியில் வசித்து வந்த அவரை பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தேசிய புலனாய்வு கழக (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் கைது செய்தனர்.
இவர், பஞ்சாப்பில் லண்டா மற்றும் படாலா ஆகியோருக்கு ஆயுத விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்காக மத்திய பிரதேசத்தில் ஆயுத சப்ளை செய்து வந்த ராணா பாயிடம் இருந்து, சிங் ஆயுதங்களை கொள்முதல் செய்து வந்துள்ளார். இதன்படி, 10 கைத்துப்பாக்கிகளை வாங்கிய சிங், அவற்றை பஞ்சாப்பில் உள்ள லண்டா மற்றும் படாலாவுக்கு கொடுத்துள்ளார். தொடர்ந்து, கூடுதல் ஆயுதங்களை கடத்த திட்டமிட்டு இருந்துள்ளார்.
கடந்த ஜூலையில், பல்ஜீத் சிங் என்ற ராணா பாய் என்பவர் ஆயுத சப்ளை செய்ததற்காக கைது செய்யப்பட்டார். இதன்பின்னர் ஜதீந்தர் சிங் தப்பி விட்டார். அவரை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.