அரசுத் தேர்வு விண்ணப்பங்களுக்கு ஜிஎஸ்டி: மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி கண்டனம்

இளைஞர்களின் காயங்களில் மத்திய அரசு உப்பை தேய்ப்பதாக பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2024-12-24 03:48 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

உத்தர பிரதேச மாநிலம், லக்னோ, சுல்தான்பூர் சாலையில் உள்ள கல்யாண்சிங் சூப்பர் ஸ்பெஷாலிட்டி புற்றுநோய் மருத்துவமனையில், பல்வேறு துறைகளில் பணி நியமனம் செய்ய தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வில் கலந்து கொள்வதற்கான விண்ணப்ப படிவங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இது தொடர்பான ஊடக செய்தியை பகிர்ந்துள்ள காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, தனது எக்ஸ் தளத்தில், "பா.ஜ.க. அரசால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிக்க முடியவில்லை. "இளைஞர்களின் காயங்களில் உப்பை தேய்ப்பது போல் தேர்வு படிவங்களுக்கு 18 சதவீத வரியை மத்திய அரசு விதிக்கிறது. அக்னிவீரர் திட்டம் உள்பட பல்வேறு அரசு வேலைகளுக்கு தேர்வுக்கான படிவங்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

தேர்வு படிவங்களை பூர்த்தி செய்த பிறகு ஒருவேளை வினாத்தாள்கள் கசிந்தால் இளைஞர்கள் செலுத்திய பணம் வீணாக்கப்படுகிறது. பெற்றோர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்து ஒவ்வொரு பைசாவையும் சேமித்து தங்கள் குழந்தைகளைப் படிக்கவும், தேர்வுகளுக்குத் தயார்படுத்தவும் செய்கின்றனர். ஆனால் பா.ஜ.க. அரசு அவர்களின் கனவுகளை வருமான ஆதாரமாக மாற்றி உள்ளது" என்று அவர் பதிவிட்டுள்ளார். 



Tags:    

மேலும் செய்திகள்