மலையாள திரையுலகில் புயலை கிளப்பிய ஹேமா கமிட்டி அறிக்கை.. சிக்கலில் நடிகர்கள்

Update:2024-08-29 16:37 IST

மலையாள திரையுலகில் நடிகைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதுகுறித்து விசாரிப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த கமிட்டியின் அறிக்கையை கேரள அரசு கடந்த வாரம் வெளியிட்டது. அதில், நடிகைகளுக்கும், பெண் கலைஞர்களுக்கும் பாலியல் தொல்லை இருப்பதாகவும், இதில் மாபியா கும்பல் தலையீடு இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து அம்பலத்திற்கு வந்தவண்ணம் உள்ளன. நடிகர் சங்கத்தில் உள்ள சிலர் மீதும் புகார் எழுந்ததால் நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உள்பட நிர்வாகிகள் பதவி விலகினர். தொடர்ந்து புகார் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

Live Updates
2024-08-29 12:38 GMT

நடிகை அளித்த புகாரின் அடிப்படையில் எம்.எல்.ஏ. முகேஷ் மீது மராடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரை கைது செய்வதற்கு செப்டம்பர் 3ம் தேதி வரை நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதற்கிடையே, முதல் மந்திரி பினராஜி விஜயனை தொடர்புகொண்ட முகேஷ், தன் மீதான புகார் மற்றும் வழக்கு தொடர்பாக விளக்கம் அளித்தார். 

தன் மீது குற்றச்சாட்டு கூறிய நடிகை, ஏற்கனவே பணம் கேட்டு மிரட்டியதாகவும், அவரின் குற்றச்சாட்டுகள் பொய்யானது என்றும் முகேஷ் கூறி உள்ளார். அந்த நடிகை தனக்கு எதிராக செய்த சதியை நிரூபிக்க, வாட்ஸ்அப் உரையாடல்கள் உள்ளிட்ட ஆதாரங்களை வழங்க உள்ளதாகவும் முதல்-மந்திரியிடம் தெரிவித்தார்.

2024-08-29 12:20 GMT

எம்.எல்.ஏ. முகேஷை உடனடியாக ராஜினாமா செய்யும்படி கூறமாட்டோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் ஆளும் இடது ஜனநாயக முன்னணியின் அமைப்பாளருமான ஜெயராஜன் கூறி உள்ளார்.

2024-08-29 12:16 GMT

முகேஷை கைது செய்ய செப்டம்பர் 3-ம் தேதி வரை நீதிமன்றம் தடை விதித்ததையடுத்து, முதல்-மந்திரி பினராயி விஜயன் வீட்டிற்கு வெளியே பலர் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், முகேஷ் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் முழக்கமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

2024-08-29 12:13 GMT

திருவனந்தபுரத்தில் உள்ள எம்.எல்.ஏ. முகேஷின் வீட்டிற்கு வெளியே இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு கருதி அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டக்காரர்கள் வீட்டிற்குள் நுழைவதை தடுப்பதற்காக பேரிகார்டுகள் வைத்திருந்தனர். சிலர் அதன் மீது ஏறி குதித்து வீட்டிற்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

2024-08-29 12:09 GMT

நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கேரளாவில் போராட்டம் வெடித்துள்ளது.

குற்றவாளிகளின் பெயர்கள் வெளியே தெரிவதை தடுப்பதற்காக ஹேமா கமிட்டி அறிக்கையை வெளியே வர விடாமல் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அரசாங்கம் தடுத்து வைத்திருந்ததாக குற்றம்சாட்டுகின்றனர்.

2024-08-29 11:35 GMT

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான எம்.எல்.ஏ. முகேஷ் ராஜினாமா செய்ய வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் வலியுறுத்தி உள்ளார்.

‘எம்.எல்.ஏ. முகேஷ் மீது தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. எனவே நடவடிக்கை எடுக்கவேண்டியது மாநிலத்தை ஆட்சி செய்யும் மார்க்சிஸ்ட் கட்சியின் கடமை. முகேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இடது ஜனநாயக முன்னணியின் (LDF) கூட்டணி கட்சிகள், எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இந்த கோரிக்கை எழுந்துள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தங்கள் எம்.எல்.ஏ.வை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாதுகாத்து வருவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது’ என்றும் சதீசன் தெரிவித்தார். 

2024-08-29 11:15 GMT

நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை தொடர்பாக கேரள அரசு சரியான நேரத்தில் செயல்படவில்லை என்று முன்னாள் மத்திய மந்திரியும் பா.ஜ.க. தலைவருமான முரளீதரன் விமர்சித்துள்ளார்.

கொல்கத்தா மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி போராட்டம் நடைபெற்றபோதிலும், பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு இந்த விஷயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. உட்பட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை பாதுகாக்க முயற்சிக்கிறது என்றும் குற்றம்சாட்டினார்.

2024-08-29 11:11 GMT

ஹேமா கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றவாளிகளின் பெயர்களை வெளியிட வேண்டும் என்று திரையுலகில் உள்ள தொழில்நுட்ப வல்லுனர்களின் தொழிற்சங்கமான கேரள திரைப்பட ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ஆதரவு மற்றும் உளவியல் ஆதரவை வழங்க உள்ளதாகவும் உறுதி அளித்துள்ளது.

2024-08-29 11:09 GMT

எம்.எல்.ஏ. முகேஷை கைது செய்ய எர்ணாகுளம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. செப்டம்பர் 3-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என தெரிவித்துள்ளது.

2024-08-29 11:07 GMT

நடிகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.வுமான முகேஷ் மீது நடிகை ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில், முகேஷ் மீது மராடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்