நாடாளுமன்ற மக்களவை 24-ம் தேதி கூடுகிறது: மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தகவல்

மக்களவை சபாநாயகர் தேர்வு, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்கள் பதவி ஏற்பு உள்ளிட்டவை இந்தக் கூட்டத்தொடரில் நடைபெற உள்ளது.

Update: 2024-06-12 05:22 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று உள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 3-வது முறையாக மோடி கடந்த 11-ஆம் தேதி பிரதமராக பதவியேற்றார். அவருடன் 30 கேபினட் மந்திரிகள், 5 தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரிகள், 36 ராஜாங்க மந்திரிகள் என மேலும் 71 பேரும் மத்திய மந்திரிகளாக பதவியேற்றுக்கொண்டனர். மந்திரிகளுக்கான இலாகா ஒதுக்கீடு செய்யும் பணியும் முடிந்துள்ளது.

இந்த நிலையில், 18-வது மக்களவை கூட்டத்தொடரின் முதல் அமர்வு வரும் 24 ஆம் தேதி தொடங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு இது தொடர்பாக கூறியிருப்பதாவது: 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 24 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 3 ஆம் தேதி வரை நடைபெறும். புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பிக்கள் பதவி பிரமாணம் எடுத்துக்கொள்வார்கள்.

கூட்டத்தொடரின் முதல் மூன்று நாட்கள் புதிய எம்.பிக்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெறும். 27 ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி உரை நிகழ்த்துவார். இந்த உரையில், புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட அரசின் அடுத்த 5 ஆண்டுக்கான செயல்திட்டம் உள்ளிட்டவை இடம் பெறும் என்று தெரிகிறது.ஜனாதிபதி உரைக்கு பிறகு மந்திரிகளை பிரதமர் மோடி அவைக்கு அறிமுகம் செய்து வைப்பார். மாநிலங்களவையின் 264-வது அமர்வும்  27 ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 3 ஆம் தேதி நிறைவு பெறும்" இவ்வாறு அவர் கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் நீட் விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால், 18-வது மக்களவையின் முதல் அமர்விலேயே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என தெரிகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்