ராஜமலை பகுதியில் மின்சார பஸ் சேவை: 13-ந்தேதி தொடங்கப்படுகிறது

டீசல் மூலம் இயக்கப்படும் பஸ்களால் மலைப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என கூறப்பட்டது.;

Update:2024-09-10 08:50 IST

மூணாறு,

மூணாறு அருகே உள்ள ராஜமலை, இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதியாகும். இங்கு வரையாடுகள் அதிக அளவில் உள்ளன. இதனை பார்த்து ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு சென்று வருகின்றனர். மூணாறு-உடுமலை சாலையில் ஐந்தாம் மைல் என்ற இடத்தில் இருந்து வனத்துறைக்கு சொந்தமான பஸ்களில் ராஜமலைக்கு வனத்துறையினர் அழைத்து செல்கின்றனர். இதற்காக மொத்தம் 9 பஸ்கள் இயக்கப்படுகின்றன. டீசல் மூலம் இயக்கப்படும் அந்த பஸ்களால், ராஜமலை பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதைக்கருத்தில் கொண்டு அந்த 9 பஸ்களையும் நிறுத்தி விட்டு, அதற்கு பதிலாக மின்சாரத்தால் இயங்கக்கூடிய பஸ்களை இயக்க வனத்துறை முடிவு செய்துள்ளது. மின்சார பஸ் சேவை தொடக்க விழா, வருகிற 13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. விழாவில், கேரள வனத்துறை மந்திரி சசீந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மின்சார பஸ் சேவையை தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் ராஜமலை பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் ஹரி கிருஷ்ணன், நிதின் லால் ஆகியோர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்