கெஜ்ரிவாலுக்கு தீவிரமான நோய்கள் எதுவும் இல்லை: ஜாமீன் வழங்க மறுத்த டெல்லி கோர்ட்டு

மருத்துவ காரணங்களுக்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரப்பட்டிருந்தது.

Update: 2024-06-06 20:46 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் இடைக்கால ஜாமீன் அளித்தது. நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக வழங்கப்பட்ட இந்த இடைக்கால ஜாமீன் கடந்த 1-ந் தேதியுடன் முடிந்தது.

இதை தொடர்ந்து 2-ந் தேதி கெஜ்ரிவால் திகார் சிறைக்கு சென்றார். இந்த நிலையில், மதுபான கொள்கை ஊழல் வழக்கு நேற்று முன்தினம் டெல்லி சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ காரணங்களுக்காக கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரப்பட்டது. ஆனால், இடைக்கால ஜாமீன் வழங்க நீதிபதி மறுத்து விட்டார்.

இந்த நிலையில் இடைக்கால ஜாமீன் மறுக்கப்பட்டதற்கான காரணத்தை விளக்கிய நீதிபதி காவேரி பவேஜா , "கெஜ்ரிவால் மேற்கொண்ட விரிவான பிரசார சுற்றுப்பயணங்கள் மற்றும் தேர்தல் கூட்டங்கள் குறித்து அமலாக்கத்துறை தரப்பு வக்கீல் எடுத்துரைத்தார். இதன் மூலம் கெஜ்ரிவாலுக்கு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய அல்லது தீவிரமான நோய்கள் எதுவும் இல்லை என்பது தெளிவாகிறது. மருத்துவ பரிசோதனை செய்ய கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் கோருகிறார். இது சரியான காரணம் என்று கூற முடியாது. ஏனெனில் சிறையிலேயே மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளலாம்" என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்