மத்திய பட்ஜெட்டில் அதிகபட்சம்... ராணுவத்துக்கு ரூ.6.22 லட்சம் கோடி ஒதுக்கீடு

ராணுவ அமைச்சகத்துக்கு பட்ஜெட்டில் ரூ.6 லட்சத்து 22 ஆயிரம் கோடியும், உள்துறை அமைச்சகத்துக்கு ரூ.2.19 லட்சம் கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-07-23 22:36 GMT

புதுடெல்லி,

மத்திய பட்ஜெட்டில், நடப்பு நிதியாண்டில் ராணுவ அமைச்சகத்துக்கு ரூ.6 லட்சத்து 21 ஆயிரத்து 940 கோடியே 85 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, மற்ற அமைச்சகங்களுக்கான நிதிஒதுக்கீட்டை விட அதிகம் ஆகும்.

இந்ததொகை, கடந்த நிதியாண்டில் ஒதுக்கியதை விட 4.79 சதவீதம் அதிகம். 2022-2023 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டை விட சுமார் ரூ.1 லட்சம் கோடி, அதாவது 18.43 சதவீதம் அதிகம்.

ராணுவ அமைச்சகத்துக்கான நிதி ஒதுக்கீட்டில், 27.66 சதவீத தொகை மூலதனத்துக்கும், 14.82 சதவீத தொகை வருவாய் செலவினத்துக்கும், 30.66 சதவீத தொகை ஊதியம் மற்றும் இதர படிகளுக்கும், 22.70 சதவீத தொகை ஓய்வூதியத்துக்கும், 4.17 சதவீத தொகை சிவில் அமைப்புகளுக்கும் செலவிடப்படும்.

எல்லை சாலை அமைப்புகளுக்கான நிதிஒதுக்கீடு ரூ.6 ஆயிரத்து 500 கோடி ஆகும்.

கடலோர காவல்படைக்கு ரூ.7 ஆயிரத்து 651 கோடியே 80 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் ஒதுக்கீட்டை விட 6.31 சதவீதம் அதிகம்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துக்கான (டி.ஆர்.டி.ஓ.) நிதி ஒதுக்கீடு, ரூ.23 ஆயிரத்து 263 கோடியே 89 லட்சத்தில் இருந்து ரூ.23 ஆயிரத்து 855 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஓய்வூதியத்துக்கு ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 205 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது, முந்தைய நிதியாண்டை விட 2.17 சதவீதம் அதிகம்.

ராணுவத்துக்கான நிதிஒதுக்கீட்டில், லடாக்கில் 13 ஆயிரத்து 700 அடி உயரத்தில் நியோமா விமான தளம் அமைத்தல் உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்து 643 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் பெரும்பகுதியான ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்து 275 கோடி, மத்திய போலீஸ் படைகளான சி.ஆர்.பி.எப்., எல்லை பாதுகாப்பு படை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு ரூ.42 ஆயிரத்து 277 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அந்தமான்-நிகோபார் தீவுகளுக்கு ரூ.5 ஆயிரத்து 985 கோடியும், சண்டிகாருக்கு ரூ.5 ஆயிரத்து 862 கோடியும், லடாக் யூனியன் பிரதேசத்துக்கு ரூ.5 ஆயிரத்து 958 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய மந்திரிசபையின் செலவினங்களுக்கு ரூ.1,248 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை, நிவாரணம், மறுவாழ்வு ஆகியவற்றுக்கு ரூ.6 ஆயிரத்து 458 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்