பா.ஜ.க.வுக்கு ஆதரவளித்துள்ள பீகார், ஆந்திராவுக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு
பாஜகவின் கூட்டணி கட்சிகள் ஆளும் பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.;
புதுடெல்லி,
2024-25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே பீகார், ஆந்திராவை ஆளும் பாஜகவின் கூட்டணி கட்சிகள் தங்கள் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்து இருந்தன.
இந்த நிலையில், ஆந்திரா, பீகாருக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு;
பீகார்:
* பீகார் மாநிலத்திற்கு பேரிடர் நிவாரணமாக ரூ.11,500 கோடி வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு
*பீகார் மாநிலத்தில் வெள்ள பாதிப்புகளை தடுக்கவும், பாசனத்திற்காகவும் பல திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
* பீகார் மாநிலத்தில் சுற்றுலா மேம்பாட்டிற்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. நாளந்தா பகுதியை சுற்றுலா தலமாக மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* பீகாரில் கயா மற்றும் புத்தகயா கோவில்கள் மேம்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு
* பீகாரில் உள்ள புராதனமான சின்னங்கள், கோவில்களை மேம்படுத்த பட்ஜெட்டில் சிறப்பு நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா:
* ஆந்திராவில் பின்தங்கியுள்ள மாவட்டங்களுக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது..
* ஆந்திராவில் தலைநகராக உருவாகும் அமராவதியை மேம்படுத்த ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* சந்திரபாபு நாயுடுவின் கனவுத் திட்டமான பொலாவரம் நீர்ப்பாசன திட்டத்திற்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைத்த நிலையில், ஆந்திரா, பீகாருக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கி புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.