'இன்றைய ஆட்சியாளர்கள் ஆங்கிலேயர்களை விட மோசம்'-கெஜ்ரிவால் விமர்சனம்
இன்றைய ஆட்சியாளர்கள் ஆங்கிலேயர்களை விட மோசம் என கெஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார்.;

புதுடெல்லி,
விடுதலை போராட்ட வீரர்களான பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் முதல்-மந்திரி கெஜ்ரிவால் பங்கேற்றார்.நிகழ்ச்சியில் அவர் பேசும்போது மத்திய-மாநில பா.ஜனதா அரசுகளை கடுமையாக சாடினார். இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறியதாவது:-
பாபாசாகிப் அம்பேத்கர், பகத்சிங் ஆகியோர் நமது முன்மாதிரிகள். ஆங்கிலேயர்களை அகற்றினால் மட்டும் போதாது, சமூகத்தின் கட்டமைப்பையே மாற்ற வேண்டும் எனவும், இல்லையென்றால் நம்மவர்கள் ஆங்கிலேயரை விட மோசமாக இருப்பார்கள் என்றும் பகத்சிங் அடிக்கடி கூறுவார்.
அவரது கணிப்பு மிகச்சரியாக நடந்துள்ளது. இன்றைய ஆட்சியாளர்கள் ஆங்கிலேயர்களை விட மோசம். டெல்லியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த 48 மணி நேரத்தில் அரசு அலுவலகங்களில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத்சிங் படங்களை அகற்றி இருக்கிறார்கள். பகத்சிங்கை விட இந்த நாட்டுக்காக அதிக தியாகம் செய்தவர்கள் இருக்கிறார்களா?அம்பேத்கர் மற்றும் பகத்சிங்கின் கனவுகளை நனவாக்கவே ஆம் ஆத்மி அரசியலுக்கு வந்து இருக்கிறது. அதிகாரத்துக்காக வரவில்லை.
டெல்லியில் பெண்களுக்கான இலவச பஸ் பயண திட்டத்தில் மாநில அரசு கட்டுப்பாடு விதித்து இருக்கிறது. செல்போன் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்தால் மட்டுமே இலவச டிக்கெட்டுகளை பெண்களுக்கு வழங்குகிறார்கள். பயணிகளுக்கான வசதிகளை அதிகரிப்பதற்கு பதிலாக ஏற்கனவே இருப்பதையே திரும்பப்பெற்று வருகின்றனர். மகளிருக்கு ரூ.2,500 வழங்கும் திட்டத்தை ஏற்கனவே தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் பா.ஜனதா தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறி விட்டது. இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.