மராட்டியம்: மொபைல் போனில் கிரிக்கெட் பார்த்தபடி வண்டி ஓட்டிய அரசு பஸ் ஓட்டுநர் பணிநீக்கம்
மராட்டியத்தில் மொபைல் போனில் கிரிக்கெட் பார்த்தபடி வாகனம் ஓட்டிய அரசு பஸ் ஓட்டுநர் இன்று பணிநீக்கம் செய்யப்பட்டார்.;

புனே,
மராட்டியத்தில் மும்பையில் இருந்து புனே நோக்கி செல்லும் அரசு பஸ் ஒன்றின் ஓட்டுநர் நேற்று மொபைல் போனில் கிரிக்கெட் பார்த்தபடி வண்டி ஓட்டியுள்ளார். இதனை அந்த பஸ்சில் பயணித்த பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து, அதனை மந்திரிகள் மற்றும் முதல்-மந்திரி பட்னாவிசுக்கு டேக் செய்து சமூக ஊடகத்தில் வெளியிட்டு விட்டார்.
இதனை அடுத்து மராட்டிய போக்குவரத்து மந்திரி பிரதாப் சர்நாயக், உடனடியாக இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனால், அந்த ஓட்டுநர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இதுபற்றி மந்திரி சர்நாயக் கூறும்போது, பொறுப்பற்ற முறையில் மற்றும் பயணிகளுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என கூறினார்.
ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களும் வண்டி ஓட்டும்போது, மொபைல் போனில் கிரிக்கெட் அல்லது திரைப்படங்களை பார்க்கின்றனர் என பல்வேறு புகார்கள் வருகின்றன. இதுபோன்ற செயல்களுக்கு எதிராக போக்குவரத்து துறை விரைவில் புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.