குணால் கம்ரா மீது மேலும் 3 வழக்குகள் பதிவு
முன்ஜாமீன் பெற்ற நிலையில் குணால் கம்ரா மீது மேலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.;

மும்பை,
காமெடியன் குணால் கம்ரா சமீபத்தில் துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே குறித்து பாடிய கேலிப்பாடல் சர்ச்சையானது. இதையடுத்து சிவசேனாவினர் குணால் கம்ரா வீடியோ பதிவு செய்த ஸ்டூடியோவை அடித்து நொறுக்கினர். இந்த விவகாரம் குறித்து போலீசார் சிவசேனாவினர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.இதேபோல ஏக்நாத் ஷிண்டேயை 'துரோகி ' எனகூறி பாடல் பாடிய குணால் கம்ரா மீது சிவசேனாவினர் புகார் அளித்தனர்.
இந்த புகார் குறித்து குணால் கம்ரா மீது கார் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இந்த வழக்கில் குணால் கம்ரா சென்னை ஐகோர்ட்டில் இடைக்கால முன் ஜாமீன் பெற்று உள்ளார். இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டே குறித்து இழிவாக பாடல் பாடியதாக குணால் கம்ரா மீது சிவசேனாவினர் அளித்த புகாரின் பேரில் நாசிக், ஜல்காவ், புல்தானா பகுதிகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பேசுதல், அவதூறு பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்குகள் கார் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.