உத்தர பிரதேசம்: கைகள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கிய இளம்பெண் - போலீஸ் தீவிர விசாரணை
உத்தர பிரதேசத்தில் கைகள் கட்டப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.;

லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் உள்ள நக்ரா என்ற கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர், அவரது வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கில் தொடங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அந்த பெண்ணின் இரு கைகளும் பின்புறமாக கட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த பெண்ணுக்கு வரும் ஏப்ரல் 25-ந்தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அவரது உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த எதிர்க்கட்சிகள், ஆளும் பா.ஜ.க. அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இது குறித்து சமாஜ்வாடி கட்சியின் 'எக்ஸ்' தளத்தில், "ஆதித்யநாத் அரசின் தோல்வியால் நமது மகள்கள் பலியாகி வருகின்றனர். பா.ஜ.க. அரசின் கீழ் பெண்கள் தினமும் கொலை செய்யப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அழிக்கப்படுகிறார்கள். இதுதான் முதல்-மந்திரியின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மையா? குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்" என்று பதிவிடப்பட்டுள்ளது.
அதே போல் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள பதிவில், "பா.ஜ.க. அரசின் கீழ் தினந்தோறும் நமது சகோதரிகளுக்கும், மகள்களுக்கும் இதுபோன்ற வேதனை தரும் சம்பவங்கள் ஒவ்வொரு நாளும் நடக்கின்றன. ஆனால் யோகி ஆதித்யநாத் தனது அதிகாரத்தின் மகிழ்ச்சியைத் தாண்டி வேறு எதையும் பார்ப்பது இல்லை" என்று பதிவிடப்பட்டுள்ளது.