ஜனவரி மாதம் குரூப்-4 கலந்தாய்வு நடைபெறும் -டி.என்.பி.எஸ்.சி.
குரூப்-4 தேர்வுகளுக்கான கலந்தாய்வு வருகிற ஜனவரி மாதம் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.;
சென்னை,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகள் நடத்தி நிரப்பி வருகிறது. அந்த வகையில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை உள்ளடக்கிய மொத்தம் 9 ஆயிரத்து 491 பணி இடங்களுக்கான குரூப்-4 போட்டித் தேர்வு கடந்த ஜூன் மாதம் 9-ந்தேதி நடத்தப்பட்டது. தேர்வை 15 லட்சத்து 88 ஆயிரத்து 684 பேர் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள், கடந்த அக்டோபர் மாதம் 28-ந்தேதி வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கீடு விதி, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அடிப்படையில், கணினி வழியிலான சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வானவர்கள் பட்டியலை கடந்த 7-ந்தேதி டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. அதன் அடிப்படையில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள், தங்களின் சான்றிழ்களை பதிவேற்றம் செய்தனர். இந்த நிலையில், குரூப்-4 தேர்வுகளுக்கான கலந்தாய்வு வருகிற ஜனவரி மாதம் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு, டி.என்.பி.எஸ்.சி, 'எக்ஸ்' சமூகவலைத்தள பக்கத்தில் வெளியாகி உள்ளது.