ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு நிதி உதவி - உயர்கல்வித்துறை தகவல்
ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுவதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.;
சென்னை,
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினர் செயலர் வின்சென்ட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் கல்லூரிகளின் ஆய்வு மாணவர்களுக்கான அறிவியல் ஆய்வு நிதியுதவி பற்றாக்குறையை களையும் திட்டத்தை ஆண்டுதோறும் செயல்படுத்தி வருகிறது. கல்லூரிகளில் ஆய்வு நிதியுதவி பெரும்பாலும் கிடைப்பதில்லை என்பதால், ஆய்வு மாணவர்களின் சிறந்த ஆய்வு முயற்சிகள் தடைபடுகின்றன. எனவே, கல்லூரிகளில் படிக்கும் முழு நேர பி.எச்டி ஆய்வு மாணவர்களை ஊக்குவிப்பதற்காக, நிபுணர்களால் தேர்வு செய்யப்படும் ஆய்வுகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் நிதியுதவி அளிக்கப்படுகிறது.
ஆய்வு மாணவர்கள், அங்கீகரிக்கப்பட்ட ஆய்விதழ்களில் குறைந்த பட்சம் 2 ஆய்வு கட்டுரைகளை பதிப்பித்திருந்தால் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஆய்வு உதவித் தொகை மற்றும் ஆண்டொன்றுக்கு இதர செலவுகளுக்கு ரூ.30 ஆயிரம் என மொத்தம் ரூ.3 லட்சம் தொகை 2 ஆண்டுகளுக்கு வழங்க இந்த திட்டம் வழிவகுக்கிறது. கல்லூரியில் படிக்கும் ஆராய்ச்சி மாணவர்கள் நிதியுதவிக்கு வருகிற 30-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை, www.tanscst.tn.gov.inஎன்ற இணையதளத்தில் அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.