மதுரை ஆவணி மூலத்திருவிழா: சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம்
மதுரையில் ஆவணி முதல் பங்குனி வரை 8 மாதங்கள் சுந்தரேஸ்வரர் ஆட்சி புரிவதாக ஐதீகம்.;
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பல்வேறு சிறப்புகள், திருவிளையாடல்கள் நிறைந்த ஆவணி மூலத் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. சிவபெருமானின் திருவிளையாடல்களை விளக்கும் வகையில் சிறப்பு அலங்காரம் தொடர்ந்து நடைபெறுகிறது.
கருங்குருவிக்கு உபதேசம், நாரைக்கு மோட்சம், மாணிக்கம் விற்ற திருவிளையாடல், தருமிக்கு பொற்கிழி அருளிய திருவிளையாடல், உலவாக்கோட்டை அருளிய லீலை, பாணனுக்காக அங்கம் வெட்டிய திருவிளையாடல் லீலை ஆகியவற்றைத் தொடர்ந்து நேற்று (11-ம் தேதி) காலையில் வளையல் விற்ற திருவிளையாடல் நடைபெற்றது. அப்போது சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் வளையல் விற்ற அலங்காரத்தில் காட்சி அளித்தனர். சுந்தரேஸ்வரர் வேடம் அணிந்த பட்டர், வளையல் விற்ற திருவிளையாடலை நடித்து காண்பித்தார். பின்னர் சுவாமி தங்கப்பல்லக்கிலும், அம்மன் தங்கப்பல்லக்கிலும் எழுந்தருளி ஆவணி வீதிகளில் வலம் வந்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று மாலையில் சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேக வைபவம் நடைபெற்றது. இதற்காக சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் சுந்தரேஸ்வரர்-மீனாட்சியுடன் எழுந்தருளினார். பின்னர், ராயர் கிரீடம் சூட்டி, ரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடத்தப்பட்டது.
பின்னர் சுவாமியிடமிருந்து செங்கோலை அவரது பிரதிநிதியாக மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல் தியாகராஜன் பெற்று சுவாமி சன்னதி 2-ம் பிரகாரத்தில் வலம் வந்தார். பின்னர் அந்த செங்கோலை சுவாமியின் திருக்கரத்தில் சமர்ப்பித்தார். பட்டாபிஷேக நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மதுரையில் சித்திரை முதல் ஆடி வரை 4 மாதம் மீனாட்சி அம்மனும், ஆவணி முதல் பங்குனி வரை 8 மாதங்கள் சுந்தரேஸ்வரரும் ஆட்சி புரிவதாக ஐதீகம். அதன்படி இப்போது சுந்தரேஸ்வரர் ஆட்சி தொடங்கி இருப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Devotional