தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புதிய சக்கரம் பொருத்தப்பட்ட வெள்ளி ரதம் சோதனை ஓட்டம்
வெள்ளி ரதத்திற்கு ரூ.4 லட்சம் மதிப்பில் பழைய மர சக்கரம் அகற்றப்பட்டு புதிதாக இரும்பு சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. தீபத் திருவிழவின் 6-ம் நாள் இரவில் வெள்ளி ரதம் மாடவீதியில் உலா நடைபெறும். இந்த நிலையில் வெள்ளி ரதத்திற்கு ரூ.4 லட்சம் மதிப்பில் பழைய மர சக்கரம் அகற்றப்பட்டு புதிதாக இரும்பு சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று மதியம் புதிதாக சக்கரம் பொருத்தப்பட்ட வெள்ளி ரதத்தை அதன் நிலையில் இருந்து கோவில் முன்பு வரை டிராக்டரின் மூலம் இழுத்து சக்கரத்தின் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்பது குறித்து சோதனை ஓட்டம் செய்து பார்க்கப்பட்டது. அப்போது வெள்ளி ரதத்தின் சக்கரம் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. அதன் பின்னர் வெள்ளி ரதம் மீண்டும் அதன் நிலையின் முன்பு கொண்டு வரப்பட்டு சக்கரம் சரி செய்யும் பணி நடைபெற்றது.
தொடர்ந்து வெள்ளி ரதம் சோதனை ஓட்டம் செய்யப்பட்டது. அப்போது வெள்ளி ரதம் தேரடி வீதியில் உள்ள பெரிய தேர் வரையில் இழுத்து செல்லப்பட்டு மீண்டும் நிலையில் நிறுத்தப்பட்டது.