திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவம் தொடங்கியது

முக்கிய நிகழ்வான பஞ்சமி தீர்த்தம் டிசம்பர் 6-ம் தேதி நடைபெற உள்ளது.

Update: 2024-11-28 08:26 GMT

திருச்சானூர்:

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை பிரம்மோற்சவம் இன்று தொடங்கியது.

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, கோவில் வளாகம் முழுவதையும் தூய்மை செய்யும் புனித சடங்கான ஆழ்வார் திருமஞ்சனம் நேற்று முன்தினம் (26.11.2024) நடைபெற்றது. நேற்று (27.11.2024) தாயாருக்கு லட்ச குங்குமார்ச்சனை நடைபெற்றது. அதன்பின் அங்குரார்ப்பணம் நடைபெற்றது. இன்று காலையில் (28.11.2024) தாயாருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, கொடிமரத்தில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது.

பிரம்மோற்சவ விழா நாட்களில் தினமும் காலையிலும் இரவிலும் தாயார் வாகனங்களில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முதல் நாளான இன்று இரவு 7 மணிக்கு சின்ன சேஷ வாகனத்தில் தாயார் எழுந்தருள்கிறார். டிசம்பர் 5-ம் தேதி (5.12.2024) காலையில் தேரோட்டம் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான பஞ்சமி தீர்த்தம் டிசம்பர் 6-ம் தேதி நடைபெற உள்ளது.

பிரம்மோற்சவ விழாவிற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. டிசம்பர் 8-ம் தேதி வரை அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்