கார்த்திகை மாதத்தில் மட்டும் கண் திறக்கும் யோக நரசிம்மர்

நரசிம்மர் வீற்றிருக்கும் சோளிங்கர் மலைக்கோவிலை சென்றடைய 1305 படிகள் ஏறிச் செல்ல வேண்டும், ரோப் கார் வசதியும் உள்ளது.;

Update:2024-11-25 12:03 IST

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளது சோளிங்கர் யோக நரசிம்மர் ஆலயம். மலையின் மீது யோக நரசிம்மர் வீற்றிருக்கிறார். ஆழ்வார்கள் பாடிய 108 திவ்ய தேசங்களுள் இந்த ஆலயமும் ஒன்று.

தல புராணம்

திருமாலின் தசாவதாரங்களில் மிகவும் சிறப்பானதும், தனித்துவமானதுமான அவதாரம் நரசிம்ம அவதாரம் தான். இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான், அசைக்க முடியாத பக்தி மற்றும் நம்பிக்கை உடைய பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு தெய்வம் ஓடி வரும் என்பதை உலகம் அறிய செய்த அவதாரம். நாளை என்ற சொல்லே தன்னிடம் கிடையாது என பக்தர்கள் வேண்டிய உடனேயே வந்து அருள் செய்ய கூடிய தெய்வமாக நரசிம்ம மூர்த்தி விளங்குகிறார்.

நரசிம்மர் எப்படி உக்கிர மூர்த்தியாக இரண்ய வதம் செய்தாரோ, அதை போல் பக்தர்களிடத்தில் கருணாமூர்த்தியாக இருக்கக் கூடியவர். தவக்கோலத்தில் காட்சி தந்த நரசிம்மர்பெருமாள், தனது பக்தன் பிரகலாதனுக்காக, தூணிலிருந்து நரசிம்ம மூர்த்தியாக வெளிப்பட்டு, இரண்யனை வதம் செய்த புராணம் அனைவருக்கும் தெரியும். ஆனால் பெருமாள் தனது பக்தனுக்காக நரசிம்ம அவதாரம் எடுத்த காட்சி அங்கு மட்டும் தானே நிகழ்ந்தது. அந்த நரசிம்ம மூர்த்தியின் கோலத்தை தரிசிக்க தேவர்கள், முனிவர்கள் என பலரும் ஆர்வம் கொண்டு ஆங்காங்கே தவம் செய்தனர். அப்படி தவம் செய்த முனிவர்களையும், தேவர்களையும் காலகேய அசுரர்கள், கும்போதர அசுரர்கள் என அசுர கூட்டங்கள் பலவிதமாக துன்புறுத்தி வந்தன. இதனால் ஆஞ்சநேயரிடம் தனது சங்கையும், சக்கரத்தையும் கொடுத்து அசுரர்களை வதம் செய்யும் படி அனுப்பி வைத்தார் நரசிம்மர்.

அசுரர்கள் அழிந்த பிறகு சப்த ரிஷிகளும், தேவர்களும், ஆஞ்சநேயரும் கேட்டுக் கொண்டதன்படி அவர்கள் தவம் செய்த அதே மலை மீது, தவம் செய்யும் நிலையில் யோக நரசிம்மராக திருக்காட்சி கொடுத்தார். தேவர்களும், ரிஷிகளும் தரிசித்த அதே கோலத்தில் இன்றளவும் சோளிங்கர் மலை மீது யோக நரசிம்மராக பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார்.

சோளிங்கர் மலை மீது தவக்கோலத்தில் வருடத்தின் 11 மாதங்களும் கண் மூடி அமர்ந்த நிலையில் காட்சி தரும் நரசிம்மர், கார்த்திகை மாதத்தில் மட்டும் தனது கண்களை திறந்து, தன்னை காண வரும் பக்தர்களை பார்த்த நிலையில் காட்சி கொடுக்கிறார்.

நரசிம்மர் வீற்றிருக்கும் இந்த மலைக்கோவிலை அடைய 1305 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். அருகில் அமைந்துள்ள சிறிய மலையில் சங்கு, சக்கரத்துடன் காட்சி தரும் ஆஞ்சநேயரை தரிசிக்க 406 படிகள் ஏறி செல்ல வேண்டும்.

ரோப்கார்

மலைக்கோவிலை சென்றடைய ரோப்கார் வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினசரி 1000 பக்தர்கள் மலைக்கு செல்லலாம். ஏராளமான பக்தர்கள் ரோப்காரில் சென்று நரசிம்மரை தரிசித்து வருகின்றனர்.

இந்த தலத்தில் பக்தர்கள் தங்களின் கோரிக்கைகளை தாயாரிடமும், ஆஞ்சநேயரிடமும் சொன்னால் போதும் அவர்கள் நரசிம்மரிடம் நமது வேண்டுதலை சேர்த்து விடுவார்கள் என்பது நம்பிக்கை.

கடிகாசலம்

108 திவ்ய சேதங்களில் ஒன்றாக திகழும் இந்த தலத்திற்கு கடிகாசலம் என்றொரு பெயரும் உண்டு. ஒரு நாளிகை அல்லது கடிகை என்பது 24 நிமிடங்களை குறிக்கும். 24 நிமிடங்கள் தங்கியிருந்தால் போதும். இந்த தலத்தில் 24 நிமிடங்கள் எவர் ஒருவர் தங்கியிருந்து வழிபடுகிறாரோ அவருக்கு மோட்சம் கிடைக்கும் அளவிற்கு நரசிம்மர் அருளை வாரி வழங்குவார் என்பது நம்பிக்கை.

ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு தரிசனம்

நரசிம்மர் கண் திறந்திருக்கும் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் விஷேச சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இதில் 3-வது ஞாயிற்றுக்கிழமை மிகவும் விஷேசமானதாக கருதப்படுகிறது. அன்று ஏராளமான பக்தர்கள் மலையில் குவிந்து நரசிம்மரை தரிசனம் செய்வார்கள். கற்கண்டு, வெல்லம், வாழைப்பழம், தயிர்சாதம் நைவேத்தியமாக படைத்து பக்தர்கள் வழிபடுகின்றனர். சில பக்தர்கள் வேட்டி-சேலையும் நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர். மனவளர்ச்சி குன்றியவர்கள், பில்லி, சூனியம், ஏவல், தீராத வியாதி இருப்பவர்கள், யோக நரசிம்மரை வழிபட்டால் விரைவில் குணமாவதாக நம்பிக்கை.

தாம்பத்ய பிரச்சனை, குழந்தையின்மை, திருமணத்தடை நீக்கும் தலமாகவும் இது விளங்குகிறது. கேட்ட வரத்தை அள்ளி தருபவராக நரசிம்மர் அருள்பாலித்து வருகிறார்.

நரசிம்மர் கண் திறந்திருக்கும் இந்த கார்த்திகை மாதத்தில் சோளிங்கர் மலைக்கு சென்று நரசிம்மரை தரிசித்து, அவரின் அருளை பெறலாம்.

Tags:    

மேலும் செய்திகள்