சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கம்- தமிழக அரசு அறிவிப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

Update: 2022-08-14 04:30 GMT

சென்னை:

பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய 5 போலீஸ் அதிகாரிகளுக்கு 2022-ம் ஆண்டு சுதந்திரதினத்தை முன்னிட்டு, அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதல்-அமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்படுகிறது.

இதில் கீழ்கண்ட போலீசாருக்கு காவல் பதக்கம் வழங்கப்படுகிறது.

  1. பிரேம் ஆனந்த் சின்கா, சென்னை பெருநகர கூடுதல் போலீஸ் கமிஷனர் (சட்டம் - ஒழுங்கு தெற்கு)
  2. க.அம்பேத்கார், போலீஸ் இன்ஸ்பெக்டர் (கடலூர் குற்றப்புலனாய்வுத் துறை தனிப்பிரிவு)
  3. சு.சிவராமன், சென்னை அடையாறு போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்
  4. வை.பழனியாண்டி, மதுரை மாநகரம் மதிச்சியம் போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்
  5. மா.குமார், செம்மஞ்சேரி போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்


இதேபோன்று, புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் 10 போலீஸ் அதிகாரிகளுக்கு தமிழக முதல்-அமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் வழங்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதில் கீழ்கண்ட போலீசாருக்கு சிறப்புப்பணிப் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளது,

  1. கோ.ஸ்டாலின், மதுரை மாநகர துணை போலீஸ் கமிஷனர்
  2. ச.கிருஷ்ணன், சேலம் மாநகர டி.எஸ்.பி. (ஒருங்கிணைந்த குற்ற அலகு குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை)
  3. மா.பிருந்தா, விழுப்புரம் மாவட்ட ரோஷனை போலீஸ் இன்ஸ்பெக்டர்
  4. அ.பிரபா, நாமக்கல் மாவட்டம் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை போலீஸ் இன்ஸ்பெக்டர்
  5. வீ.சீனிவாசன், சென்னை பெருநகர கோடம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர்
  6. மா.சுமதி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்
  7. சி.நாகலெட்சுமி, நாகப்பட்டினம் மாவட்டம் கரியாப் பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர்
  8. வெ.துளசிதாஸ், சென்னை பெருநகர பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்
  9. ச.ல.பார்த்தசாரதி, சென்னை குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை (ஒருங்கிணைந்த குற்ற அலகு-1) போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்
  10. கா.இளையராஜா, சென்னை அடையாறு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்


விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா 8 கிராம் (1 பவுன்) எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். இந்த விருதுகள், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்