திருச்சியில் ரூ.17.60 கோடி மதிப்பீட்டில் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க அனுமதி

திருச்சியில் ஆம்னி பேருந்து நிலையம் அமைப்பதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்வாக அனுமதி வழங்கியுள்ளார்.

Update: 2024-09-20 12:33 GMT

சென்னை,

தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;

திருச்சிராப்பள்ளி மாநகரில் பெருகிவரும் மக்கள் தொகை காரணமாகவும், ஏற்கனவே அமைந்துள்ள இரண்டு பேருந்து நிலையங்கள் போதுமானதாக இல்லாததாலும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டும் தற்போது பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் பகுதியில் வெளியூர் செல்லும் தனியார் சொகுசு பேருந்து நிலையம் (Omni Bus Stand) சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது. இப்பேருந்து நிலையம், சுமார் 30,849 சதுரடி பரப்பளவிலான இரண்டு பேருந்து நடைமேடைகளுடன் 82 பேருந்துகளை கையாளும் வசதியுடன் 37 எண்ணிக்கையிலான இயக்கப்படும் பேருந்து நிறுத்த தடங்களுடன் மற்றும் 45 எண்ணிக்கையிலான காத்திருப்பு பேருந்து நிறுத்த தடங்களுடன் மொத்தம் 1,42,945 சதுரடி பரப்பளவில் அமையவுள்ளது.

மேலும், இப்பேருந்து நிலையம், மழைநீர் வடிகால், சுகாதாரமான குடிநீர், 2 கழிப்பறை வளாகம், 17 இருக்கைகள், 31 சிறுநீர் கழிவறைகள். கண்காணிப்பு கேமிரா, பொதுமக்கள் சேவை மையம் மற்றும் இதர வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் பகுதியில், மூலதன மானிய நிதி - இயக்குதல் மற்றும் பராமரிப்பு நிதியின் கீழ் ரூ.17.60 கோடி மதிப்பீட்டில் வெளியூர் செல்லும் தனியார் சொகுசு பேருந்து நிலையம் (Omni Bus Stand) அமைப்பதற்கு நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

திருச்சிராப்பள்ளி, பஞ்சப்பூரில் அமையவுள்ள இந்த தனியார் சொகுசு பேருந்து நிலையமானது (Omni Bus Stand) தென்மாவட்டங்களிலிருந்தும், திருச்சிராப்பள்ளி மாநகரிலிருந்தும், சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு இயக்கப்படும் தனியார் சொகுசு பேருந்துகளின் எளிதான போக்குவரத்திற்கும், அவற்றின் ஓட்டுநர் உள்ளிட்ட பணியாளர்களுக்கும், இப்பேருந்து சேவையை பயன்படுத்தும் பொதுமக்களுக்கும், திருச்சிராப்பள்ளி மாநகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கும் பெரும் பயனளிக்கும் வகையில் அமையவுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்