பூர்வீக சொத்து யாருக்கு எளிதில் கிடைக்கும்? ஜாதகத்தில் உள்ள சாதகமான அமைப்புகள்..!
ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று சொல்லப்படும் புத்திர ஸ்தானம்தான் மிக முக்கியமாக கருதப்படுகிறது.;
ஜாதகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள், சொத்து வாங்குவதாக இருந்தாலும் சொத்து பிரச்சினையாக இருந்தாலும் ஜாதகம் பார்த்து அதன்படியே அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுப்பது வழக்கம்.
சிலருக்கு பூர்வீக சொத்துக்களை சட்டப்பூர்வமாக பெற முடியாமல் பல்வேறு தடைகள் ஏற்படும். இவர்கள் தங்கள் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகள் உள்ளிட்ட அம்சங்களை பார்க்க வேண்டியது அவசியம்.
ஜாதகத்திற்கும் பூர்வீக சொத்திற்கும் சம்பந்தம் உண்டா?
ஒருவருக்கு சொத்து இருக்குமா, இருக்காதா? அல்லது எந்த வகையில் சொத்து சேரும்? என்பதை ஜாதகம் மூலம் கணிக்க முடியும். குறிப்பாக பூர்வீக சொத்து கிடைப்பதற்கு அவரவர் ஜாதகத்தில் வழியிருந்தால்தான் எளிதில் கிடைக்கும். இதற்கு நாம் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்கவேடும். ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று சொல்லப்படும் புத்திர ஸ்தானம்தான் மிக முக்கியமாக கருதப்படுகிறது.
பூர்வீக சொத்து கிடைக்கும் கிரக அமைப்பு என்னென்ன?
ஒருவர் ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுப கிரகங்கள் இருப்பதும் மற்றும் அந்த ஸ்தானாதிபதி நன்கு பலமுடன் இருப்பதும், அந்த ஸ்தானத்தை சுப கிரகங்கள் பார்ப்பதும், தீய கிரகங்களின் சேர்க்கை இல்லாமல் இருப்பதும், அந்த ஸ்தானத்தில் நீச்சம் அடைந்த கிரகம் இல்லாமல் இருப்பதும் அவசியம். மேலும் வீடு மனைக்கு காரணமான செவ்வாய் நன்கு பலம் பெற்று, அதாவது ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்றிருந்தாலும், செவ்வாய் கேந்திர மற்றும் திரிகோண ஸ்தானத்தில் இருந்தாலும், பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியும் கேந்திர மற்றும் திரிகோண ஸ்தானத்தில் இருந்தாலும், லக்னாதிபதி நன்கு பலமுடன் அதாவது ஆட்சியோ உச்சமோ பெற்றிருந்தாலும், கேந்திர திரிகோணத்தில் இருந்து மற்ற மற்ற மேற்கூறிய கிரக நிலையும் சிறப்புடன் இருந்தாலும் பூர்வீக சொத்து எளிதில் கிடைக்கும்.
பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் மாதுர்காரகனின் தொடர்பு இருந்தால் தாய் வழி சொத்தும் அதே போன்று பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பிதுர்காரகனின் தொடர்பு இருந்தால் தந்தை வழி சொத்தும், ராகு மற்றும் கேதுக்கள் தொடர்பு இருந்தால் பாட்டன் மற்றும் பாட்டியின் சொத்தும் தடையின்றி கிடைக்கும்.
பாட்டன் சொத்து கிடைக்க கிரக அமைப்பு எப்படி இருக்க வேண்டும்?
பாட்டன் அதிபதியான ராகு கேதுக்கள் பூர்வ புண்ணிய ஸ்தானத்துடன் இணைந்தோ இருக்க வேண்டும். அவர்களை சுபகிரகங்கள் பார்த்திருக்க வேண்டும். அவ்வாறு பார்த்திருந்தால் அவர்களுக்கு மூதாதையர்களின் சொத்து கிடைக்கும்.
உதாரண ஜாதகம் 1:
இந்த ஜாதகத்தில் லக்னம் ரிசபம், ராசி துலாம் ஆகும். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி புதன் ஆட்சி மற்றும் உச்சம் பெற்றுள்ளது. புதனுடன் சூரியனும் உள்ளார். அவர் பிதுர்காரகனாவதால் தந்தை வழி தாத்தா பாட்டியின் பூர்வீக சொத்து கிடைக்கப் பெற்றது. மேலும், பூமி காரகன் செவ்வாயும் ஆட்சி பெற்று கேந்திரத்தில் உள்ளார். இது அவருக்கு கிடைக்கும் நில அந்தஸ்தை பெற்றுத் தர சுலபமாக்குகிறது.
தாய் வழி சொத்து கிடைக்க கிரக அமைப்பு எப்படி இருக்க வேண்டும்?
தாய் ஸ்தானமான சுக ஸ்தானம் நன்கு அமைந்திருக்க வேண்டும். அதாவது அந்த ஸ்தானாதிபதி ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்றிருக்க வேண்டும். அல்லது அந்த ஸ்தானாதிபதி பூர்வ புண்ணிய ஸ்தானத்துடன் இணைந்தோ இருக்க வேண்டும். அல்லது சுகாதிபதி பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருப்பவருக்கு தாயின் சொத்து கிடைக்கும்.
உதாரண ஜாதகம் 2
இந்த ஜாதகர் ரிசப ராசி கன்னி லக்னம். இவரது தாய் ஸ்தானமான நான்காம் இடத்துக்குரியவர் ஆட்சி பெற்றுள்ளார். மேலும், சந்திரன் மாதுர்காரகனாவார். இவர் உச்சம் பெற்றும் உள்ளார். மேலும், செவ்வாய் பூமிக்கு அதிபதியாவார், அவரும் ஆட்சிப் பெற்றுள்ளார். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியும் லாபத்தில் உள்ளார். ஆதலால், தாய்வழி மூலம் கிடைக்கும் பூர்வீக சொத்து கிடைத்து விடும்.
தந்தை வழி சொத்து கிடைக்க கிரக அமைப்பு எப்படி இருக்க வேண்டும்?
தந்தை ஸ்தானமான பாக்கிய ஸ்தானம் நன்கு அமைந்திருக்க வேண்டும். அதாவது அந்த ஸ்தானாதிபதி ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்றிருக்க வேண்டும். அல்லது அந்த ஸ்தானாதிபதி பூர்வ புண்ணிய ஸ்தானத்துடன் இணைந்தோ இருக்க வேண்டும். அல்லது பாக்கியாதிபதி பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருப்பவருக்கு தந்தையின் சொத்து கிடைக்கும்.
உதாரண ஜாதகம் 3
இந்த ஜாதகம் விருச்சிக லக்னம் கடக ராசி ஆகும். தந்தை ஸ்தானம் நன்கு வலுப்பெற்றும் மற்றும் சூரியன் ஆட்சி பெற்று கேந்திரத்திலும், செவ்வாய் ஆட்சி பெற்று லக்னத்திலும் உள்ளனர். அத்துடன் பூர்வீக ஸ்தானத்தில் குருவும் ஆட்சி பெற்றுள்ளதால் இந்த ஜாதகருக்கு எளிதாக தந்தையின் சொத்து முழுதும் கிடைக்கப்பெற்றது. ஆகவே, ஒருவருக்கு பூர்வீக சொத்து கிடைக்குமா, கிடைக்காதா? என்பதை ஜாதகத்தின் மூலம் கணிக்க முடியும்.
கட்டுரையாளர்: திருமதி. N.ஞானரதம்
Cell 9381090389