செல்வம் தரும் தன தாரை

தனதாரை நட்சத்திரம் என்பது பொருளாதார ரீதியாக உதவியாக செயல்படும் தன்மை கொண்டது.;

Update:2025-01-08 11:30 IST

ஜாதக ரீதியாக உங்கள் லக்னத்திற்கு இரண்டாம் இடம் தனஸ்தானம் ஆகும். அந்த இடம் அல்லது ராசி உங்களுடைய பொருளாதார நிலை மற்றும் பண வரவு பற்றி குறிப்பிடும் மிக முக்கியமான இடமாகும். ஜோதிட ரீதியாக உலகில் பிறந்த அனைவருக்குமே தனஸ்தானம் என்பது சுப பலன் பெற்றதாக அமைந்து விடுவதில்லை.

தனஸ்தானமாகிய அந்த 2-ம் இடம் திதி சூனியமாகவோ, அதற்கு இரு புறமும் அதாவது லக்னம் மற்றும் 3-ம் இடங்களில் பாவ கிரகங்கள் அமர்ந்து பாபகர்த்தாரி யோகம் பெற்றதாகவோ இருந்தால் பொருளாதார வரவில் நிச்சயமற்ற நிலை உருவாகும். அதுமட்டுமல்லாமல் 2-ம் இடத்திற்கு உரிய கிரகம் அமர்ந்த இடம், பெற்ற பலம் அல்லது பலவீனம், மற்ற கிரகங்களின் சேர்க்கை, பார்வை, சாரம் ஆகியவற்றின் தன்மைகளுக்கு ஏற்ப பலாபலன்களை அளிக்கும்.

இந்த விதிமுறைகளின்படி பெரும்பாலானோருக்கு 2-ம் இடம் போதிய சுபத்தன்மை பெறாமல், பொருளாதார ரீதியாக பல தடைதாமதங்களை உருவாக்குகிறது. இந்த நிலையில் பொருளாதார நிலையை எவ்வாறு மேம்படுத்திக் கொள்வது என்ற கேள்விக்கு விடையாக சம்பத்து தாரை என்ற தனதாரை நட்சத்திரம் அமைகிறது.

இந்த தனதாரை நட்சத்திரம் என்பது பொருளாதார ரீதியாக உங்களுக்கு உதவியாக செயல்படும் தன்மை கொண்டது. உதாரணமாக, உங்கள் ஜென்ம நட்சத்திரம் உத்திராடம் என்றால் உங்களது தனதாரை நட்சத்திரம் திருவோணம் ஆகும். அந்த வகையில் திருவோண நட்சத்திரம் வரும் நாளில் முக்கியமான விஷயங்களை செய்வதும், திருவோண நட்சத்திரத்திற்கு உரிய கடவுளை அதே நாளில் வழிபாடு செய்வதும், பொருளாதார முன்னேற்றத்திற்கு நல்ல துணையாக அமைகிறது.

உங்கள் ஜென்ம நட்சத்திரம் உத்திராடம் (அஸ்வினி முதல் ரேவதி வரை எந்த நட்சத்திரமாகவும் உங்கள் ஜென்ம நட்சத்திரம் இருக்கலாம்) என்றால் அதன் தனதாரை நட்சத்திரம் திருவோணம் மட்டுமல்லாமல் ரோகிணி மற்றும் அஸ்தம் ஆகிய நட்சத்திரங்களும் தனதாரையாக கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் ரோகிணி (அனுஜென்ம நட்சத்திரம்) மற்றும் அஸ்தம் (திரிஜென்ம நட்சத்திரம்) ஆகிய நட்சத்திரங்களுக்கு உரிய கடவுளை அந்தந்த நட்சத்திரம் வரும் நாட்களில் வழிபட்டாலும், பொருளாதார முன்னேற்றத்திற்கு அது துணையாக அமையும்.

அதாவது, நீங்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்திலிருந்து எண்ணி வரக்கூடிய 2, 11, 20 ஆகிய நட்சத்திரங்கள் உங்களுக்கு சம்பத்து என்ற தனதாரை நட்சத்திரங்களாகும்.

அவ்வகையில் அஸ்வினி முதல் ரேவதி வரை உள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு உரிய தனதாரை, அனுஜென்ம தனதாரை, திரிஜென்ம தனதாரை ஆகிய நட்சத்திரங்கள் மற்றும் அவற்றுக்குரிய கடவுள்கள் குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.

அஸ்வினி

பரணி - துர்க்கை, பூரம் - பார்வதி அல்லது ஆண்டாள், பூராடம் - ஜம்புகேஸ்வர சிவன்

பரணி

கார்த்திகை - முருகன், உத்திரம் - மகாலட்சுமி, உத்திராடம் - கணபதி

கார்த்திகை

ரோகிணி - கிருஷ்ணர், அஸ்தம் - சாஸ்தா அல்லது காயத்ரிதேவி, திருவோணம் - ஹயக்ரீவர் அல்லது வாமனர்

ரோகிணி

மிருகசீரிஷம் - சந்திரசூடேஸ்வரர், சித்திரை - சக்கரத்தாழ்வார், அவிட்டம் - அனந்தசயன பெருமாள்

மிருகசீரிஷம்

திருவாதிரை - நடராஜர், சுவாதி - நரசிம்மர், சதயம் - மிருத்யுஞ்ஜயேஸ்வர சிவபெருமான்

திருவாதிரை

புனர்பூசம் - ஸ்ரீராமர், விசாகம் - முருகன், பூரட்டாதி - குபேரன் அல்லது ஏகபாத சிவன்

புனர்பூசம்

பூசம் - தட்சிணாமூர்த்தி, அனுசம் - லட்சுமி நாராயணர், உத்திரட்டாதி - காமதேனு

பூசம்

ஆயில்யம் - ஆதிசேஷன் அல்லது நாகர், கேட்டை - வராகர் அல்லது ஹயக்கிரீவர், ரேவதி - ஸ்ரீரங்கநாதர்

ஆயில்யம்

மகம் - சூரிய நாராயணர், மூலம் - ஆஞ்சனேயர், அஸ்வினி - சரஸ்வதி

மகம்

பூரம் - பார்வதி அல்லது ஆண்டாள், பூராடம் - ஜம்புகேஸ்வர சிவன், பரணி - துர்கை

பூரம்

உத்திரம் - மகாலட்சுமி, உத்திராடம் - கணபதி, கார்த்திகை - முருகன்

உத்திரம்

அஸ்தம் - சாஸ்தா அல்லது காயத்ரிதேவி, திருவோணம் - ஹயக்ரீவர் அல்லது வாமனர், ரோகிணி - கிருஷ்ணர்,

அஸ்தம்

சித்திரை - சக்கரத்தாழ்வார், அவிட்டம் - அனந்தசயன பெருமாள், மிருகசீரிஷம் - சந்திரசூடேஸ்வரர்

சித்திரை

சுவாதி - நரசிம்மர், சதயம் - மிருத்யுஞ்ஜயேஸ்வர சிவபெருமான், திருவாதிரை - நடராஜர்

சுவாதி

விசாகம் - முருகன், பூரட்டாதி - குபேரன், ஏகபாத சிவன், புனர்பூசம் - ஸ்ரீராமர்

விசாகம்

அனுசம் - லட்சுமி நாராயணர், உத்திரட்டாதி - காமதேனு, பூசம் - தட்சிணாமூர்த்தி

அனுசம்

கேட்டை - வராகர் அல்லது ஹயக்கிரீவர், ரேவதி - ஸ்ரீரங்கநாதர், ஆயில்யம் - ஆதிசேஷன் அல்லது நாகர்

கேட்டை

மூலம் - ஆஞ்சனேயர், அஸ்வினி - சரஸ்வதி, மகம் - சூரிய நாராயணர்

மூலம்

பூராடம் - ஜம்புகேஸ்வர சிவன், பரணி - துர்கை, பூரம் - பார்வதி அல்லது ஆண்டாள்

பூராடம்

உத்திராடம் - கணபதி, கார்த்திகை - முருகன், உத்திரம் - மகாலட்சுமி

உத்திராடம்

திருவோணம் - ஹயக்ரீவர் அல்லது வாமனர், ரோகிணி - கிருஷ்ணர், அஸ்தம் - சாஸ்தா அல்லது காயத்ரிதேவி

திருவோணம்

அவிட்டம் - அனந்தசயன பெருமாள், மிருகசீரிஷம் - சந்திரசூடேஸ்வரர், சித்திரை - சக்கரத்தாழ்வார்

அவிட்டம்

சதயம் - மிருத்யுஞ்ஜயேஸ்வர சிவபெருமான், திருவாதிரை - நடராஜர், சுவாதி - நரசிம்மர்

சதயம்

பூரட்டாதி - குபேரன், ஏகபாத சிவன், புனர்பூசம் - ஸ்ரீராமர், விசாகம் - முருகன்

பூரட்டாதி

உத்திரட்டாதி - காமதேனு, பூசம் - தட்சிணாமூர்த்தி, அனுசம் - லட்சுமி நாராயணர்

உத்திரட்டாதி

ரேவதி - ஸ்ரீரங்கநாதர், ஆயில்யம் - ஆதிசேஷன் அல்லது நாகர், கேட்டை - வராகர் அல்லது ஹயக்கிரீவர்

ரேவதி

அஸ்வினி - சரஸ்வதி, மகம் - சூரிய நாராயணர், மூலம் - ஆஞ்சனேயர்

மேற்கண்ட சம்பத்து தாரை நட்சத்திரங்கள் மற்றும் அவற்றின் அதிதேவதைகள் ஆகியவற்றை அந்தந்த நட்சத்திரம் வரக்கூடிய நாட்களில் முறையாக வழிபாடு செய்து வந்தால் பொருளாதார வரவில் உள்ள தடைதாமதங்கள் விலகி முன்னேற்றம் ஏற்படும்.

கட்டுரையாளர்: சிவகிரி ஜானகிராம்

Tags:    

மேலும் செய்திகள்