தலைச்சம் பிள்ளைக்கும் தலைச்சம் பெண்ணுக்கும் திருமணம் செய்யலாமா..? ஜோதிட அலசல்
தலைச்சம் பிள்ளைக்கும் தலைச்சம் பெண்ணுக்கும் திருமணம் செய்யக்கூடாது என்று கூறி சிலர் திருமண பேச்சுவார்த்தையை நிறுத்திவிடுவார்கள்.;
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வரன் பார்க்கும்போது, அவரவர் குலம் கோத்திரம் மற்றும் அவர்களது பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப ஒரு வட்டத்திற்குள் பார்த்து ஜாதகங்களை தேர்ந்தெடுக்கின்றனர். அத்துடன் இருவரது ஜாதகத்தில் நாக தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம், நட்சத்திரப் பொருத்தங்கள் போன்றவற்றையும் நன்கு பார்த்துவிட்டு பின்பு தகுதி மற்றும் அந்தஸ்தை விசாரிக்கின்றனர். அதன்பிறகு பொருத்தம் பார்த்து திருமணத்தை முடிவு செய்கின்றனர்.
இப்படி பலகட்ட ஆய்வுக்கு பிறகு திருமண பேச்சுவார்த்தை ஆரம்பிக்கும்போது, பையனும் பெண்ணும் அந்தந்த குடும்பத்தில் மூத்த பிள்ளையாக இருந்தால் புதிதாக ஒரு சிக்கல் முளைத்துவிடும். தலைச்சம் பிள்ளைக்கும் தலைச்சம் பெண்ணுக்கும் ஆகாதே? எப்படி திருமணம் செய்வீங்க? என்ற கேள்வி எழுந்துவிடும். இதை காரணம் காட்டி சிலர் அந்த சம்பந்தத்தை நிறுத்திவிடுவார்கள். இதற்கு காரணம் என்ன? என்பதை பார்ப்போம்.
முற்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஐந்தாறு பிள்ளைகள் இருக்கும். ஒரு சில குடும்பங்களில் பிள்ளைகளின் எண்ணிக்கை பத்தைத் தாண்டிவிடும். இதனால் அந்த குழந்தைகளுக்கிடையே வயது வித்யாசங்கள் அதிகமாக இருக்கும். மூத்த பிள்ளைகள்தான் இளைய பிள்ளைகளை பெற்றோர் போன்று கவனிப்பார்கள். அவர்களுக்கு குடும்பச்சுமை அதிகமாக இருக்கும்.
தலைச்சனும் தலைச்சனும் திருமணம் செய்துகொண்டால், இரண்டு குடும்பங்களின் பொறுப்புகளையும் இவர்களே தாங்க வேண்டிய நிலை உருவாகும். எனவே, தலைச்சன் தலைச்சனுக்கு ஆகாது என்று சொல்லி வைத்திருக்கலாம். அது தற்காலத்தில் பொருந்துமா என்றால் நிச்சயம் பொருந்தாது.தலைச்சம் பிள்ளை, தலைச்சம் பெண்ணை திருமணம் செய்யலாம்.
அதேசமயம், இதற்கும் ஜோதிடத்திற்கும் சம்பந்தம் உண்டு. அதாவது ஜோதிடத்தில் ஒரு முக்கியமான விசயத்தை அடிப்படையாக கொண்டே ஜோதிடம் பார்க்க வேண்டும்.
27 நட்சத்திரங்களில் கேட்டை என்ற நட்சத்திரம் என்பதை சமஸ்கிருதத்தில் ஜேஷ்டா நட்சத்திரம் என்று அழைப்பர். ஜேஷ்டா என்றால் மூத்த நட்சத்திரம் என்று பொருளாகும். அதே போன்று சித்திரை முதல் பங்குனி வரை 12 தமிழ் மாதங்கள் உள்ளன. அதில் ஆனி மாதத்தை ஜேஷ்டா மாதம் என்று சமஸ்கிருதத்தில் அழைப்பர். இந்த ஜேஷ்டா மாதத்தில் வரக்கூடிய கேட்டை நட்சத்திரம் அன்று திருமணம் செய்வதை தவிர்க்கவேண்டும் என்று கூறி வைத்துள்ளனர். அதாவது திருமணம் செய்வதற்கு முகூர்த்தம் நிர்ணயிக்கும்போது இவ்வாறு பார்க்க வேண்டும் என்று கூறி வைத்துள்ளனர் நமது முன்னோர்கள்.
ரஜ்ஜுப் பொருத்தத்தில் தலை நட்சத்திரங்கள்
ரஜ்ஜுப் பொருத்தம் 10 வித திருமணப் பொருத்தங்களில் ரஜ்ஜுப் பொருத்தம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இப்பொருத்தம் மனைவி, கணவனுடன் நீண்ட காலம் சந்தோஷமாக வாழும், பாக்கியத்தை வழங்குகிறது.
27 நட்சத்திரங்களையும் ஆரோகணம் அவரோகணம் என்று பிரிக்கும் பொழுது மேலே இருக்கக்கூடிய கூம்பு வடிவில் உள்ள அனைத்து பகுதியையும் தலை நட்சத்திரங்கள் என்று அழைப்பர். இந்த தலை நட்சத்திரங்கள் என்பது மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் என்ற மூன்று நட்சத்திரங்கள் ஆகும். மணமகனுக்கோ அல்லது மணமகளுக்கோ இந்த நட்சத்திரங்களுக்குள் வந்தால் திருமண வாழ்வில் இணைக்கக் கூடாது என்பது ஜோதிட மரபு. காரணம், இந்த தலை நட்சத்திரங்களை சேர்த்தால் இருவரில் ஒருவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இப்படி தலை நட்சத்திரங்களை வைத்து சொன்ன ஜாதக கணிப்புதான் பிற்காலத்தில் மருவி தலைச்சனுக்கும் தலைச்சனுக்கும் ஆகாது என்று மாறியிருக்கலாம்.
எவ்வாறு தலை நட்சத்திரங்களை பிரிப்பது?
நட்சத்திர மண்டலத்தை ஒரு மனிதனாக உருவகப்படுத்திக் கொண்டு அவன் பாதத்தில் அஸ்வினி நட்சத்திரத்தையும், தொடையில் பரணி, வயிற்றில் கார்த்திகை, கழுத்தில் ரோகினி, தலையில் மிருகசீரிடம் என நட்சத்திரங்களை ஏறுமுகமாக வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும். மேல் நோக்கி செல்பவற்றை ஆரோகணம் என்றும், கீழ்நோக்கி வருபவற்றை அவரோகணம் என்றும் கொள்வர்.
தலை (சிரசு): மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்
கழுத்து (கண்டம்): ரோகினி, திருவாதிரை, அஸ்தம், ஸ்வாதி, திருவோணம். சதயம்.
வயிறு (உதரம்): கார்த்திகை, புனர்புசம், உத்திரம், விசாகம், உத்ராடம், பூரட்டாதி
தொடை: பரணி, பூசம், பூரம், அனுஷம், பூராடம், உத்ரட்டாதி,
பாதம்: அஸ்வினி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி.
இவ்வாறு தலை நட்சத்திரங்களை பிரிக்கலாம்.
கட்டுரையாளர்: திருமதி ந.ஞானரதம்,
செல்: 9381090389