விருந்தும் மருந்தும் மூன்று நாள்தான்.. ஏன்?
பழமொழிகளின் உண்மைப் பொருளைப் புரிந்து கொண்டால் அதில் உள்ள கருத்துக்கள் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.;
வைத்தியத்திற்கும் ஜோதிடத்திற்கும் சம்பந்தம் உண்டா என்பதில் பலருக்கு சந்தேகம் எழுகிறது. முற்காலத்தில் வைத்தியர்கள் ஜோதிடம் மற்றும் ஆன்மீகத்தை நன்கு உணர்ந்தவர்களாக இருந்தனர். அதாவது மணி, மந்திரம், ஔடதம் என்பதுதான் அவை. மணி என்றால் காலத்தை உணர்த்துவது, அதற்குப் பெயர்தான் ஜோதிடம். மந்திரம் என்றால் ஆன்மீகத்தைக் குறிக்கும். ஔடதம் என்றால் மருத்துவத்தைக் குறிக்கும். இவை மூன்றும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்துள்ளது என்பதுதான் உண்மை. மேலும், திதி, நட்சத்திரம், வாரம், யோகம், கரணம் இந்த மூன்றையும் நமது சித்தர்களான நமது முன்னோர்கள் தங்கள் வைத்தியத்திற்குப் பயன்படுத்தி வந்தனர்.
இதற்கு உதாரணமாக சொல்லப்போனால் ஒரு ஜோதிடரிடம் சென்று ஜாதகம் பார்க்க நேர்ந்தால் அவர் குறிப்பிட்ட கிழமைகளைச் சொல்லி ராகு காலம் போன்ற நேரத்தையும் குறிப்பிட்டு இன்ன கோவிலுக்குச் சென்று தாங்கள் பிறந்த நட்சத்திரத்தில் பரிகாரம் செய்யுங்கள். அல்லது இந்த கோவிலுக்குச் சென்று வந்தால் நிச்சயம் நோய் குணமாகும் அல்லது உங்கள் கோரிக்கை நிறைவேறும் என்பர். இதன் மூலம் ஆன்மீகத்திலும் ஜோதிடம் வருவதை நாம் பார்க்கின்றோம்.
இதேபோல் ஆன்மிகத்தில் மருத்துவமும் அடங்கி உள்ளது. உதாரணமாக, பழநியில் இருக்கும் முருகர் கோவிலுக்குச் சென்று பிரசாதம் உண்டால் அவர்களின் நாட்பட்ட நோய்களும் தீர்கின்றன என்பது பலர் அனுபவித்து உணர்கின்றனர். காரணம் அங்குள்ள முருகர் சிலை நவபாஷாணத்தால் ஆனது. பெருமாள் கோவில்களில் தரும் துளசித் தீர்த்தம் சைனஸ் மற்றும் சுவாச நோய்களை தீர்க்க வல்லது. இதுபோன்ற உண்மைகளை அறிந்தால் ஆன்மீகத்தில் மருத்துவம் கலந்துள்ளது என்பதை நாம் உணர முடியும். இதனைத்தான் மணி, மந்திர, ஔடதம் என்பர்.
இதனை உணர வைக்க சித்தர் பாடலும் உண்டு.
ஆதிரை பரணி கார்த்திகை
ஆயில்யம் முப்பூரம் கேட்டை
தீதுறு விசாகம் ஜோதி
சித்திரை மகமீ ராறும்
மாதனங் கொண்டார் தாரார்
வழி நடை பட்டார் மீளார்
பாய்தனில் படுத்தார் மீளார்
பாம்பின் வாய் தேரை தானே.
மேலே குறிப்பிட்ட திருவாதிரை, பரணி, கார்த்திகை, ஆயில்யம், பூரம், சித்திரை, கேட்டை, மகம், சுவாதி, விசாகம், பூராடம், பூரட்டாதி ஆகிய பன்னிரென்டு நட்சத்திரங்களில் நோய் வந்தால் நோய் நீங்குவது சிரமம். இதனைத்தான் பாய்தனில் படுத்தார் மீளார் என்று சொல்லிவைத்தனர் நமது முன்னோர்கள்.
பழமொழிகளில் ஜோதிட மருத்துவம் உண்டா?
இதே போன்று பழமொழிகளிலும் ஜோதிட சித்த மருத்துவமும் கலந்துள்ளதை நாம் காணலாம். இதற்கு உதாரணமாக விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்பதை குறிப்பிடலாம்.
பழமொழிகள் என்றாலே பலர் தன் வாழ்க்கையில் அனுபவித்தவைகளை சுருங்கக் கூறி புரியவைத்தல் என்பதாகும். அதாவது, பழமொழியின் வாயிலாக அவை உறுதிபடுத்துவதை நான் நம் அனுபவத்தில் கண்டு உணர முடிகிறது.
விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்ற பழமொழியை அடிக்கடி நம் மக்கள் பயன்படுத்துவார்கள். அதாவது, நாம் யார் வீட்டிற்காவது விருந்துக்கு சென்றால் அங்கு முதல் மூன்று நாட்கள் நன்கு கவனிப்பதும், அதுவே பின்பு படிப்படியாக குறைந்து, ஒரு கட்டத்தில் வேண்டாவெறுப்பாக கவனிப்பார்கள் என்பதும் பரவலாக சொல்லப்படுகிறது. இவ்வாறு விருந்தினரை நன்கு கவனிக்காததற்கு தான் இந்த பழமொழியைப் பயன்படுத்தி வருகின்றனர்.
பெரும்பாலான மக்கள் பழமொழியின் உண்மையான பொருளை புரிந்து கொள்ளாமல் அவரவருக்கு மனதில் தோன்றியதை பொருளாகக் கொள்கின்றனர். ஆராய்ந்து பார்க்காமல் பொத்தாம்பொதுவாக கூறிவிடக்கூடாது. பழமொழிகளின் உண்மைப் பொருளைப் புரிந்து கொண்டால் அதில் உள்ள கருத்துக்கள் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இப்போது இந்த 'விருந்தும் மருந்தும் மூன்று நாள்' பழமொழிக்கு வருவோம். இந்த பழமொழியின் பொருள் என்னவெனில் கிழமைகளில் 'செவ்வாய், வியாழன், ஞாயிறு' இந்த மூன்று நாட்களைத்தான் குறிக்கிறது. அதாவது சித்த மருத்துவர்கள் மருந்துண்ண ஆரம்பிக்கும் நாட்களாக இதனை வரையறுத்துள்ளனர். இந்த மூன்று நாட்களில் நோய் வந்தவர்கள் மருந்துண்ண ஆரம்பித்தால் அவர்களுக்கு விரைவில் குணமாகும் என்பதுதான் அதன் சாராம்சம். அதாவது, பொதுவாக சுபகாரியங்களுக்கு ஒத்துவராத நாட்களாக செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய நாட்கள் உள்ளன. தேய்பிறைத் திதிகளிலிலும் மருந்து உண்ண ஏற்ற நாட்களாக நமது முன்னோர்கள் கருதுகின்றனர். காரணம் தேய்பிறை என்றால் வளருவதற்கு மாறாக குறைய ஆரம்பிக்கும் காலம். அதன்படி மருந்தினை தேய்பிறை காலத்தில் ஆரம்பிக்கும்போது நமது நாள்பட்ட நோய்கள்கூட குணமாகும் என்றனர் நமது முன்னோர்களான சித்த மருத்துவர்கள்.
அதேபோன்று விருந்திற்கும் மூன்று நாட்கள் என்று குறித்தனர் நம் சித்தர்கள். காரணம் இந்த மூன்று நாட்களான செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய நாட்களில் முதன் முறையாக விருந்திற்கு வருபவர்களை தவிர்ப்பதே ஆகும். அந்த மூன்று நாட்களில் புது நபர்களோ, அல்லது உறவினர்களோ அல்லது நண்பர்களோ யாராக இருந்தாலும் இந்த நாட்களில் அவர்களை உபசரித்து விருந்துண்ண வைத்தால் அவர்களின் உறவுகளில் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு பின்பு அவர்கள் பிரிந்து விடுவர் என்பதுதான் உண்மையான பொருள். ஆதலால், இந்த நாட்களில் முதன் முறையாக சந்திக்க நினைக்கும் நபரை விருந்திற்கு அழைப்பதை தவிர்ப்பது நல்லது.
இதிலிருந்து ஜோதிடத்திற்கும் மருத்துவத்திற்கும் சம்பந்தம் உண்டு என்பதை அறிய முடிகிறது.
கட்டுரையாளர்: திருமதி N.ஞானரதம்
செல்: 9381090389.