கானல் நீராகிவிடுமோ பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா!

1996, 1998, 1999-ல் பெண்கள் இடஒதுக்கீடுக்கான மசோதாக்கள் கொண்டு வரப்பட்டும் நிறைவேற்றப்படவில்லை.

Update: 2024-07-19 02:39 GMT

சென்னை,

'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம். எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி' என்று பாடினார் மகாகவி பாரதியார் அன்று. சட்டங்கள் செய்வது நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும்தான். அங்குதான் பெண்களின் பங்கு அதிகமாக இருக்கவேண்டும் என்பது பாரதியார் மட்டுமல்ல, நமது தலைவர்கள் அனைவரின் கனவாகும். இதையொட்டித்தான் நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அவைகளில் 33 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்பது அனைத்து தலைவர்களின் நீண்டகால முயற்சியாகும். இதற்காக சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே அனைத்து தலைவர்களாலும் பேசப்பட்டுக் கொண்டே வருகிறது.

1996, 1998, 1999-ல் பெண்கள் இடஒதுக்கீடுக்கான மசோதாக்கள் கொண்டு வரப்பட்டும் நிறைவேற்றப்படவில்லை. ஒரு வழியாக மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, மீண்டும் மசோதாவை நிறைவேற்றவேண்டும் என்று கொள்கை முடிவெடுக்கப்பட்டு, 2008-ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இந்த மசோதாவை ஆராய்வதற்காக நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. அந்த நிலைக்குழுவின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த ஜெயந்தி நடராஜன் இருந்தார். இந்த குழுவில் லாலுபிரசாத் யாதவ், அபிஷேக் சிங்வி, திருச்சி சிவா, செம்மலை, தாமரைச்செல்வன் உள்பட பலர் இருந்தனர்.

இந்த குழு 2009-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி பெண்களுக்கு கண்டிப்பாக 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று அறிக்கை தாக்கல் செய்தது. 2010-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி மாநிலங்களவையில் அது நிறைவேற்றப்பட்டது. ஆனால், மக்களவையில் நிறைவேற்ற முடியவில்லை. இந்த நிலையில், நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகும், உடனடியாக மக்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. 2023-ம் ஆண்டு செப்டம்பர் 21-ம் தேதி இதற்கான சிறப்பு கூட்டத்தில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா, முதலில் மக்களவையிலும், பின்பு மாநிலங்களவையிலும் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், அதில் தொகுதி வரையறை மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்திய பிறகுதான் அமலுக்கு வரும் என்று ஒரு பிரிவு இந்த சட்டத்தில் இருப்பது, உடனடியாக அமலுக்கு வரமுடியாத வகையில் ஒரு தடையை ஏற்படுத்திவிட்டது. இந்த பிரச்சினை இப்போது ஒரு இடியாப்ப சிக்கல் போல ஆகிவிட்டது. தொகுதி வரையறை செய்ய வேண்டுமென்றால், அதற்கு முன்னதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தவேண்டும். அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்ற வகையில், 2021-ம் ஆண்டிலேயே மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டிருக்கவேண்டும். கொரோனா பரவல் காரணமாக அது நடைபெறவில்லை. இப்போது நடத்துவதிலும் ஒரு சிக்கல் முளைத்துள்ளது.

மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்ற கோரிக்கை எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, கூட்டணி கட்சிகளாலும் வலியுறுத்தப்படுகிறது. இதில், ஆளும் கட்சியான பா.ஜனதாவுக்கு உடன்பாடில்லை. இதையெல்லாம் தாண்டி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடித்துவிட்டாலும், தொகுதி வரையறையின்போது புதிய பிரச்சினை ஏற்படும். அதாவது, குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றி மக்கள்தொகையை கட்டுக்குள் வைத்திருக்கும் மாநிலங்களுக்கு தொகுதி எண்ணிக்கை குறையும் என்பதால், அதற்கு தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மராட்டியம், குஜராத் உள்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இத்தனை சிக்கல்களையும் தாண்டி எப்போது பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு அமலுக்கு வரும்? 2029-ம் ஆண்டிலாவது நிறைவேற்றுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், கூட்டணி கட்சிகளின் நிர்ப்பந்தத்துக்கு ஆளாக வேண்டிய நிலையில், இந்த மசோதா கானல் நீராகிவிடுமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்