இந்த கொள்முதல் விலை போதுமா?

விவசாயிகள் மத்திய அரசாங்கத்தின் கொள்முதல் விலையை நம்பி எதிர்பார்த்துத்தான் இருக்கிறார்கள்.

Update: 2024-06-29 00:39 GMT

சென்னை,

"உழவன் கணக்கு போட்டால் உழக்குகூட மிஞ்சாது'' என்பது நீண்டநெடுங்காலமாக சொல்லப்பட்டு வரும் வழக்குமொழி. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகையில், பாதிக்குமேல் விவசாயத்தை நம்பியே வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். இவர்களின் வருமானம் எல்லாம் தொட்டுக்கோ, துடைத்துக்கோ என்பதுபோலத்தான் இருக்கிறது. எந்த விவசாயியும் விவசாயத்தில் பெரும் லாபம் பார்க்க முடியவில்லை. விவசாயம் என்பது நிச்சயமற்ற வருவாய் ஈட்டும் தொழிலாகும். ஏனெனில் அதிகமழை பெய்தாலும், மழை பெய்யாவிட்டாலும், கடும் வெயில் அடித்தாலும் பாதிப்பு விளை பொருட்களுக்குத்தான்.

அந்தவகையில் வாழ்க்கை சக்கரத்தை ஓட்டிவரும் விவசாயிகள் மத்திய அரசாங்கத்தின் கொள்முதல் விலையை நம்பி எதிர்பார்த்துத்தான் இருக்கிறார்கள். பிரதமர் நரேந்திரமோடி தேர்தலுக்கு முன்பே அதிகாரிகளிடம் புதிய ஆட்சி அமைந்தவுடன், செயல்படுத்த வேண்டிய 100 நாட்கள் செயல்திட்டத்தை வகுக்க சொன்னார். அதிகாரிகளும் துறைவாரியாக 100 நாட்கள் செயல்திட்டத்தை தயாராக வைத்திருந்தனர். ஆட்சி பொறுப்பேற்றவுடன் நடந்த முதல் மந்திரி சபை கூட்டத்தில் 5 முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதல் அறிவிப்பாக 2024-2025-ம் ஆண்டுக்கான குறுவை பயிர்களுக்காக குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒப்புதல் கிடைத்திருக்கிறது.

இதில் விவசாயிகள் அதிகமாக எதிர்பார்த்த நெல்லின் சாதாரண ரகத்துக்கு, ஏற்கனவே குவிண்டாலுக்கு ரூ.2,183 வழங்கப்பட்டு வந்தது. இப்போது ரூ.117 உயர்த்தப்பட்டு, ரூ.2,300 ஆக உள்ளது. சன்னரக நெல்லுக்கான விலை குவிண்டாலுக்கு ரூ.2,203 ஆக இருந்த நிலையில், இப்போது ரூ.117 அதிகரிக்கப்பட்டு, ரூ.2,320 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மேல் வழக்கமாக தமிழக அரசு ஊக்கத்தொகை அளிக்கும். கடந்த ஆண்டு தமிழக அரசு சாதாரண ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.82-ம், சன்னரக நெல்லுக்கு ரூ.107-ம் நிர்ணயித்து இருந்தது.

சட்டசபை தேர்தலுக்கு முன்பு தி.மு.க. நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2,500 ஆக உயர்த்துவோம் என்று சொன்னதால் நிச்சயமாக தமிழக அரசு உயர்த்தித்தரும் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். அவர்கள் நம்பிக்கை பொய்க்கவில்லை. இப்போது தமிழக அரசு சாதாரண ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.105-ம், சன்னரக நெல்லுக்கு ரூ.130-ம் ஊக்கத்தொகையாக தமிழக அரசு நிதியில் இருந்து வழங்கி சாதாரண ரக நெல் நேரடி கொள்முதல் நிலையங்களில் குவிண்டால் ரூ.2,405-க்கும், சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,450-க்கும் கொள்முதல் செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அடுத்த நிதியாண்டு முதல் தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 என்ற வீதத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

ஆனால் இப்போது உற்பத்தி செலவு மிகவும் உயர்ந்துவிட்டது. ஒரு ஏக்கரில் நெல் பயிரிட குறைந்தபட்சம் ரூ.40 ஆயிரம் ஆகிவிடுகிறது. எனவே குவிண்டாலுக்கு குறைந்தபட்சமாக ரூ.3 ஆயிரத்துக்கு மேல் தமிழக அரசு நிர்ணயித்தால்தான் விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் என்கிறார், விவசாயச் சங்கத்தலைவர் பி.ஆர்.பாண்டியன். ஒடிசாவில் புதிதாக பதவியேற்றுள்ள பா.ஜனதா அரசாங்கம் ஒரு குவிண்டாலுக்கு ரூ.3,100 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது. தெலுங்கானா அரசாங்கமும் குவிண்டாலுக்கு ரூ.2,800 ஆக உயர்த்த இருக்கிறது. அதுபோல தமிழக அரசும் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரத்துக்கு மேல் உயர்த்தித்தரவேண்டும் என்பது பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட பல விவசாய சங்கத் தலைவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்