மத்திய அரசாங்கம் தரவில்லை; தமிழக அரசு கொடுத்தது

மாநில அரசின் நிதியில் இருந்து செப்டம்பர் மாதத்துக்கான சம்பளம் வழங்கப்படும் என அன்பில்மகேஷ் அறிவித்தார்.

Update: 2024-11-11 00:54 GMT

பொதுவாக தமிழக அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் கடைசி நாளிலேயே சம்பளம் அவர்களின் வங்கிக்கணக்குகளில் போய் சேர்ந்துவிடும். மாதம் பிறந்தால்தான் சம்பளம் என்பது அவர்களுக்கு கிடையாது. ஆனால், சமக்ர சிக்சா அபியான் அதாவது, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின்கீழ் பணியாற்றும் 15 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்களையும் சேர்த்து 32,500 பேருக்கு கடந்த செப்டம்பர் மாதத்துக்கான சம்பளம் வழங்கப்படாமல் இருந்தது. இதற்கு காரணம் மத்திய அரசாங்கத்தால் இந்த திட்டத்துக்கு வரவேண்டிய தவணைத்தொகை வரவில்லை.

இந்த திட்டம் மத்திய அரசாங்க திட்டம் என்றாலும், தமிழக அரசின் பங்களிப்பும் அதில் இருக்கிறது. செலவை மத்திய - மாநில அரசுகள் 60:40 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றன. 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் இதுவரை எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்தது. இதில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.12,500 சம்பளமாக வழங்கப்பட்டு வந்தது.

மத்திய அரசாங்கம் இந்த திட்டத்துக்கான நிதியை 4 தவணைகளாக ரூ.2,152 கோடியை வழங்க வேண்டும். அந்த வகையில், இந்த கல்வி ஆண்டுக்கான முதல் தவணை தொகை ரூ.573 கோடி, வழக்கமாக ஜூன் மாதத்திலேயே வந்துவிடும். ஆனால், இன்னும் வரவில்லை. இதற்கிடையில் 2-வது தவணை தொகைக்கான காலமும் முடிந்துவிட்டது. இதுமட்டுமல்லாமல், கடந்த நிதியாண்டுக்கான கடைசி தவணைத்தொகை ரூ.249 கோடியும் கொடுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதுவரை தமிழக அரசு தன் பங்குக்குரிய தொகையான ரூ.1,434 கோடியை வைத்து சம்பளம் மற்றும் மற்ற செலவுகளை சமாளித்துவந்தது. அதுவும் தீர்ந்து போனதால், செப்டம்பர் மாதத்துக்கான பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் போனது.

நிதி வழங்காததற்கு மத்திய அரசாங்கம் கூறும் காரணம் விசித்திரமானது. பி.எம்.ஸ்ரீ பள்ளித்திட்டத்தில் தமிழக அரசு இணைவதாக கையெழுத்து போட்டால், உடனே நிதி வழங்கப்படும் என்று கூறுகிறது. பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் சேர்ந்தால் தேசியக்கல்வி கொள்கையை ஏற்றுக்கொண்டதுபோல ஆகிவிடும். இப்போது தமிழக அரசு தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக்கொள்கையை நடைமுறைப்படுத்தி வருகிறது. பி.எம். ஸ்ரீ திட்டத்தில் இணையும் நேரத்தில் தானாகவே மும்மொழிக்கல்வி கொள்கையையும் ஏற்றுக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடும் என்பதால் தமிழக அரசு இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்த நேரத்தில்கூட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பி.எம்.ஸ்ரீ பள்ளித்திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பாக இறுதி முடிவு எட்டப்படும்வரை காத்திராமல், ஏற்கனவே சமக்ர சிக்சா திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளுக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை ஏற்று உடனடியாக நிதியை மத்திய அரசாங்கம் ஒதுக்கினால்தான், இந்த ஆசிரியர்களுக்கு சம்பளமும் கொடுக்க முடியும். கல்வி நலன் சார்ந்த சில திட்டங்களையும் நிறைவேற்றவும் முடியும் என்ற நிலை இருந்தது.

இந்தநிலையில், ஆசிரியர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் சம்பளம் கோரி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் இறுதியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநில அரசின் நிதியில் இருந்து செப்டம்பர் மாதத்துக்கான சம்பளம் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, செப்டம்பர் மாத சம்பளம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் மாத சம்பளமும் தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு முன்கூட்டியே மாநில அரசு வழங்கியது. இதன் மூலம் இந்த பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு கிடைத்தாலும், மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தியும், மத்திய அரசு இதுவரை நிதி ஒதுக்காதது கவலை அளிக்கிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்