இவர்கள் இனி தொழில் அதிபர்கள் !

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட வேண்டும் என்ற வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல நலத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.

Update: 2024-11-07 04:55 GMT

சென்னை,

'சாதி வேறுபாடற்ற சமுதாயத்தை உருவாக்கவேண்டும்' என்பதுதான் நல்லுள்ளம் படைத்த ஆன்றோரின் நோக்கம். ஆனால், அதுவரை சாதி வேறுபாடுகளால் ஒடுக்கப்பட்ட மக்களை கை தூக்கிவிட இடஒதுக்கீடு அவசியம் என்ற வகையில், அரசியல் சட்டத்திலேயே தாழ்த்தப்பட்டவர்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அவர்களது உரிமைகளுக்காகவும், விடுதலைக்காகவும், அவர்களது மனித மாண்பை மீட்டெடுப்பதற்காகவும் டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் சமூக நீதி பாதையை காட்டினார்கள்.

இதில் கலைஞர் கருணாநிதியின் பங்கு அளப்பரியது. 1971-ல் ஆதி திராவிடர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை 16 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தினார். அந்த 18 சதவீதம் முழுமையுமே ஆதி திராவிடர்களுக்கே கிடைக்க செய்யும் வகையில், மலைவாழ் மக்களுக்கு ஒரு சதவீதம் இடஒதுக்கீட்டை 1990-ல் வழங்கினார். இதுமட்டுமல்லாமல், ஆதிதிராவிடரில் தாழ்ந்து கிடக்கும் அருந்ததியினருக்கு 3 சதவீதம் உள் இடஒதுக்கீடும் வழங்கி ஆதிதிராவிடர் வாழ்க்கைத்தரம் உயர வழிவகுத்த ஒரு புரட்சியாளராக கலைஞர் கருணாநிதி விளங்கினார்.

அவர் காட்டிய சமூக நீதி பாதையில் பீடுநடை போட்டுவரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சி சமூக, கல்வி, பொருளாதார நிலைகளில் இருக்கவேண்டும், அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படவேண்டும் என்ற வகையில் பல நலத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அந்த முயற்சியில், ஆதிதிராவிடர், பழங்குடியின மக்கள் வேலை தேடுபவர்களாக மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கு வேலை வழங்குபவர்களாக, அதாவது தொழில்முனைவோராக உயரவேண்டும் என்ற நோக்கில், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த திட்டப்படி, இந்த சமுதாய மக்கள் உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த புதிய தொழில்களை தொடங்கினாலோ, ஏற்கனவே தொடங்கியுள்ள தொழில்களை விரிவாக்கம் செய்தாலோ, திட்ட முதலீட்டில் 35 சதவீதம் முதலீட்டு மானியமாக அரசு வழங்கும். மீதமுள்ள 65 சதவீத தொகையில், அதிகபட்சமாக ரூ.1½ கோடி வரை வங்கி கடனாக வழங்கப்பட்டு, 65 சதவீத வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தில், 6 சதவீத வட்டியையும் அரசே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டு செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் இதுவரை 1,343 ஆதிதிராவிடர், பழங்குடியினத்தை சேர்ந்த புதிய தொழில் முனைவோரும், ஏற்கனவே தொழில் முனைவோராக இருப்பவர்களும் புதிய தொழில்களை தொடங்கவும், விரிவாக்கம் செய்யவும் என்று ரூ.124.64 கோடியை முதலீட்டு மானியமாக பெற்றிருக்கிறார்கள். இதில் 288 பேர் பெண்கள் என்பது மிகவும் பெருமைக்குரியது. இந்த திட்டத்தின் பயனை பெறுவதற்கு கல்வி தகுதி எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். வயதுவரம்பு மட்டும் 55 வயது என்று கூறப்பட்டுள்ளது. ஆக, ஆதிதிராவிடர், பழங்குடியினத்தை சேர்ந்த யாரும், அது படித்தவர்களாக இருந்தாலும் சரி, படிக்காதவர்களாக இருந்தாலும் சரி புதிய தொழில்களை அரசு வழங்கும் மானியத்துடன் தொடங்கமுடியும்.

அரசின் இந்த முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது. இதுபோல, அனைத்து இளைஞர்களும் வேலை தேடுபவர்களாக மட்டுமல்லாமல், தொழில் தொடங்கி மற்றவர்களுக்கும் வேலை கொடுப்பவர்களாக உயரும் வகையில் வாய்ப்புகளை வழங்க, இதுபோன்ற சலுகைகளை வழங்கினால் வேலையில்லா திண்டாட்டமும் மறையும், தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்பார்க்கும் தொழில் வளர்ச்சியையும் வேகமாக அடையமுடியும்.

Tags:    

மேலும் செய்திகள்