பொதுமக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு!

பணவீக்கத்தை அடிப்படையாக வைத்துத்தான் மத்திய-மாநில அரசாங்கங்களும், ரிசர்வ் வங்கியும் பல திட்டங்களை வகுக்கின்றன.

Update: 2024-11-19 00:40 GMT

சென்னை,

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார், எதையும் பாமர மக்களுக்கும் புரியும் வகையில் எளிய வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்பார். 'பணவீக்கம்' என்றால் படித்தவர்களுக்கு மட்டுமே தெரியும், அது சாதாரண மக்களுக்கும் புரியவேண்டும் என்றால், 'விலைவாசி உயர்வு' என்றே போடவேண்டும் என்பார். காரணம், பணவீக்கத்தின் முக்கிய விளைவே விலைவாசி உயர்வுதான்.

பணவீக்கம் என்பது மாதந்தோறும் அகில இந்திய அளவிலும், மாநில அளவிலும் நுகர்வோர் விலை குறியீட்டு எண், மொத்த விற்பனை விலை குறியீட்டு எண் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. பணவீக்கத்தை அடிப்படையாக வைத்துத்தான் மத்திய-மாநில அரசாங்கங்களும், ரிசர்வ் வங்கியும் பல திட்டங்களை வகுக்கின்றன. வட்டி விகித மாற்றங்களைக்கூட ரிசர்வ் வங்கி பணவீக்கத்தின் அடிப்படையில்தான் அறிவிப்பதோடு, நிதிக்கொள்கையையும் வகுக்கிறது.

கடந்த அக்டோபர் மாதத்துக்கான பணவீக்கம் அகில இந்திய அளவில் 6.21 சதவீதமாக இருந்தது. இது 14 மாதங்களில் இல்லாத உயர்வாகும். கிராமப்புற பணவீக்கம், அதாவது விலைவாசி உயர்வு 6.68 சதவீதமாகவும், நகர்ப்புற பணவீக்கம் 5.62 சதவீதமாகவும் இருக்கிறது. விலைவாசி உயர்வு 4 சதவீதத்திற்குள் இருப்பதைத்தான் தாங்கக்கூடிய அளவாக ரிசர்வ் வங்கி கருதுகிறது. அதற்குமேல் கூடுதலாக 2 சதவீதம் இருக்கலாம் என்றாலும், இப்போது அதையும் தாண்டி சென்றுவிட்டது. இந்தியாவில் மணிப்பூரில்தான் விலைவாசி அதிகம் என்ற வகையில் அங்கு பணவீக்கம் 9.69 சதவீதமாக உள்ளது. டெல்லியில் 4.01 சதவீதமாகும். தமிழ்நாட்டில் அகில இந்திய சராசரி குறியீட்டைவிட அதிகமாக 6.32 சதவீதமாக இருக்கிறது.

இதுபோல, மொத்த விற்பனை விலை குறியீட்டு எண் கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவாக கடந்த அக்டோபர் மாதத்தில் 2.36 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பணவீக்கம் அதிகமாக இருப்பதற்கு உணவுபொருட்கள், குறிப்பாக காய்கறி விலை உயர்வும், சமையல் எண்ணெய் விலை உயர்வுமே காரணம். தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற காய்கறி விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அதைவைத்து கணக்கிட்டால், கடந்த ஆண்டு பணவீக்கம் 26 சதவீதமாக இருந்தநிலையில், அக்டோபர் மாதத்தில் 42 சதவீதமாக எகிறியது.

தக்காளி பெருமளவில் சாகுபடி செய்யப்படும் கர்நாடகா, மராட்டிய மாநிலங்களில் பெய்த பெருமழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு, விலையும் உயர்ந்தது. சமையல் எண்ணெயை பொறுத்தவரை, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் கச்சா சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு சுங்க வரி இல்லை என்ற நிலைமாறி, அக்டோபர் மாதத்தில் 20 சதவீதம் விதிக்கப்பட்டது. இதுபோல, சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்க்கு 12.5 சதவீதமாக இருந்த வரி 32.5 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தானிய வகைகளின் விலையும் அதிகரித்தது.

எனவே, விலைவாசி உயர்வை உடனடியாக குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். காய்கறி, தானியங்கள் அதிகம் விளையும் மாநிலங்களில் இருந்து, பிற மாநிலங்களுக்கு சிறப்பு சரக்கு ரெயில் மூலம் கொண்டுசென்று மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கவேண்டும். மக்கள்தொகை உயர்வை கணக்கில்கொண்டு, காய்கறி சாகுபடி பரப்பை நாடு முழுவதும் அதிகரிக்கவும், உற்பத்தி செய்யப்படும் காய்கறி வகைகளை பதப்படுத்த அதிகஅளவில் குளிர்பதன சேமிப்பு கிடங்குகளை தொடங்கவும் ஏற்பாடு செய்யவேண்டும். மேலும், சமையல் எண்ணெய்க்கான சுங்க வரியையும் குறைக்கவேண்டும். மொத்தத்தில், விலைவாசி உயர்வினால் ஏற்பட்டுள்ள வலி மக்களுக்கு தொடரக்கூடாது.

Tags:    

மேலும் செய்திகள்