சாதித்து காட்டிய டிரம்ப் !

டிரம்ப் இப்போது தேர்தலில் வெற்றி பெற்று இருந்தாலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ந்தேதிதான் பதவியேற்பார்.

Update: 2024-11-08 01:14 GMT

சென்னை,

அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் ஒரு வித்தியாசமான தேர்தலாகும். நம் நாட்டைப்போல எம்.பி.க்கள் மட்டும் தேர்ந்தெடுப்பதில்லை. அங்கு 50 மாகாணங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மாகாணத்துக்கும் என அரசியல் கட்சி பிரதிநிதிகள் நியமிக்கப்படுகிறார்கள். எல்லா மாகாணத்துக்கும் ஒரே எண்ணிக்கையில் பிரதிநிதித்துவ வாக்குகள் இருப்பதில்லை. மக்கள் தொகைக்கேற்ப அதன் எண்ணிக்கை மாறுபடும். இந்தவகையில், 50 மாகாணங்களிலும் 538 பிரதிநிதிகள் இருக்கிறார்கள். அவர்கள் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் 'எலெக்டோரல் காலேஜ்' அதாவது வாக்காளர் குழு உறுப்பினர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

மக்கள் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்களுக்கு போடும் வாக்குகள் வாக்காளர் குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் வாக்குகளாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதுபோல மாகாணங்களில் உள்ள வாக்காளர் குழு உறுப்பினர்களும் மக்கள் வாக்குகளை பிரதிபலிக்கும் வகையில் வாக்களிப்பார்கள். ஒரு மாகாணத்தில் எந்த வேட்பாளர் கூடுதலாக வாக்குகளை பெறுகிறாரோ, அந்த மாகாணத்தில் உள்ள ஒட்டுமொத்த வாக்காளர் குழு உறுப்பினர்களின் வாக்குகளும் அந்த வேட்பாளர்களுக்கே சென்றுவிடும். சில ஜனாதிபதி தேர்தல்களில் தேசிய அளவில் ஒட்டுமொத்த மக்கள் வாக்கு சதவீதத்தை அதிகம் பெற்றிருந்தாலும், பிரதிநிதிகள் வாக்குகளை பெரும்பான்மையாக பெறாத சிலர் தோல்வி அடைந்திருக்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹ்ஹிலாரி கிளிண்டனும் போட்டியிட்டனர். அந்த தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் ஒட்டுமொத்த தேசிய வாக்கு சதவீதத்தை அதிகம் பெற்றிருந்தாலும் தோல்வியடைந்தார். இப்போது நடந்த தேர்தலில் டிரம்பும், தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிசும் போட்டியிட்டனர். உலக பணக்காரரான எலான் மஸ்க் தொடக்கத்திலேயே டிரம்புக்கு ஆதரவு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், அதிக அளவு தேர்தல் நிதியையும் கொடுத்து தன்னுடைய 'எக்ஸ்' சமூக வலைத்தளத்தின் மூலம் பிரசாரமும் செய்தது டிரம்ப்பின் வெற்றிக்கு துணை நின்றது.

78 வயதான டிரம்ப், 60 வயதான கமலா ஹாரீசை தோற்கடித்துள்ளார். டிரம்பின் வெற்றி பல சிறப்புகள் வாய்ந்தது. ஒரு முறை ஜனாதிபதியாக இருந்து மறு முறை தோல்வியடைந்து, மீண்டும் வெற்றிப்பெற்று இருக்கிறார். இதுபோல ஒரு நிகழ்வு சமீப காலங்களில் நடந்தது இல்லை. 1892-ல் குரோவர் கிளீவ்லாண்ட் மட்டும் இதே சாதனையை படைத்துள்ளார். பொறுப்பேற்கும்போது அதிக வயதான ஜனாதிபதி டிரம்புதான். அவர் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற இரு தேர்தல்களிலும் பெண் வேட்பாளர்களை எதிர்த்தே வெற்றி பெற்றிருக்கிறார். இந்த முறை அவர் மக்களின் 'பாப்புலர்' வாக்குகள், 'எலெக்டோரல் காலேஜ்' என்ற பிரதிநிதிகள் வாக்குகளையும் அதிகம் பெற்றிருக்கிறார்.

இதுபோல செனட் உறுப்பினர்களின் பெரும்பான்மையான ஆதரவையும் பெற்றிருப்பதால், அவர் நிறைவேற்றும் எந்த சட்ட மசோதாக்களுக்கும் முட்டுக்கட்டையே இருக்காது. என்னதான் வெற்றி பெற்று இருந்தாலும், அவரது தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக நீதிமன்றங்களில் 4 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. டிரம்ப் அரசாங்கத்திலும் இந்தியாவின் முத்திரை இருக்கிறது. துணை ஜனாதிபதியாகப்போகும் வான்ஸ்சின் மனைவி உஷா ஆந்திராவை சேர்ந்தவர். டிரம்ப் இப்போது தேர்தலில் வெற்றி பெற்று இருந்தாலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ந்தேதிதான் பதவியேற்பார். மோடியும், டிரம்பும் நல்ல நண்பர்கள் என்ற வகையில் அமெரிக்காவுடன் வர்த்தக உறவில் சில சவால்கள் இருந்தாலும், ராஜ்ய உறவு இன்னும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்