எது உண்மையான வளர்ச்சி ?

இந்தியா உலகளவில் 5-வது பெரிய பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடு என்று பெருமைபட்டுக்கொள்கிறோம்.

Update: 2024-11-23 00:32 GMT

சென்னை,

ஒவ்வொரு மனிதனுக்கும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடு என்று இருந்தால்தான் அவன் வாழ்க்கை முழுமை பெறும். ஆனால் இந்த வாழ்க்கை எல்லோருக்கும் இன்னும் கிடைக்கவில்லை. இந்தியா உலகளவில் 5-வது பெரிய பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடு என்று பெருமைபட்டுக்கொள்கிறோம். விரைவில் 3-வது இடத்துக்கு வந்து விடுவோம் என்று மார் தட்டிக்கொள்கிறோம். அதுபோல நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை பறைசாற்றும் ஜி.டி.பி. 7.2 சதவீதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலக வல்லரசு நாடுகளின் வளர்ச்சியைவிட இது அதிகமாகும்.

அதாவது சீனாவில் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதம் தான். அமெரிக்காவில் கூட 2.8 சதவீதம் தான். அப்படி நம் இந்தியா பெருமிதம் அடைந்து கொள்கிறது. மாதத்துக்கு ரூ.1 லட்சம் கோடி வசூல் செய்ய வேண்டும் என்ற இலக்கில் தொடங்கப்பட்ட சரக்கு சேவை வரி, அதாவது ஜி.எஸ்.டி. வசூல் கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.2 லட்சம் கோடியை தாண்டிவிட்டது. கடந்த அக்டோபர் மாத வசூல் கூட ரூ.1 லட்சத்து 87 ஆயிரம் கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு இருந்தும் மனிதனின் அடிப்படை தேவையில் ஒன்றான குடியிருக்க வீடு எல்லோருக்கும் கிடைத்துவிட்டதா? என்று கேட்டால் இல்லை என்ற பதில் தான் வருகிறது. 2011-ம் ஆண்டு எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 17 லட்சத்து 72 ஆயிரத்து 889 பேருக்கு குடியிருக்க வீடு இல்லை என்று தெரியவந்துள்ளது.

இந்த கணக்கில் ஊரக பகுதிகளில் 8 லட்சத்து 34 ஆயிரத்து 541 பேருக்கும், நகர்ப்பகுதிகளில் 9 லட்சத்து 38 ஆயிரத்து 348 பேருக்கும் தங்குவதற்கு இடம் இல்லை. இதில் உத்தரபிரதேச மாநிலத்தில்தான் மிக அதிகமாக 3 லட்சத்து 29 ஆயிரத்து 125 பேருக்கு வீடு இல்லை என்றும், மிக குறைவாக மிசோராமில் 152 பேருக்கு மட்டுமே வீடு இல்லை என்றும் அந்த கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 50 ஆயிரத்து 929 பேருக்கு குடியிருக்க வீடு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசங்களில் லட்சத்தீவுகளில் குடியிருக்க வீடு இல்லாத யாரும் இல்லை.

இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் குடியிருக்க வீடு இல்லாமல் பிளாட்பாரங்களில்தான் வசித்துக்கொண்டு இருக்கும்போது மற்ற வளர்ச்சிகளையெல்லாம் நெஞ்சை நிமிர்த்தி பேசுவதில் என்ன பெருமை இருக்கிறது?. எது உண்மையான வளர்ச்சி? என்றே புரியாத புதிராக இருக்கிறது. ஆனால் மற்றொரு பக்கம் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கொடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதாக அறிவித்துள்ளது. அந்த திட்டத்தின் பலன்கள் இந்த 14 ஆண்டுகளில் எத்தனை பேருக்கு சென்றடைந்துள்ளது?. இப்போது எத்தனை பேர் வீடில்லாமல் இருக்கிறார்கள்? என்ற கணக்கு விவரம் பற்றிய புள்ளி விவரம் எதுவும் அரசுகளால் அறிவிக்கப்படவில்லை. ஏனெனில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதுதான் வீடு இருக்கிறதா? என்ற கேள்வியும் இடம்பெறும் நிலையில், அப்போதுதான் இந்த புள்ளி விவரம் துல்லியமாக தெரியும். வீடற்றவர்கள் இருப்பது ஒரு சமுதாய வளர்ச்சியின் அடையாளமாக இருக்காது. 13 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்தினால்தான் இதற்கு ஒரு நல்ல பதில் கிடைக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்